சங்கராம்ருதம் – 119/உதய குமார் 

ஒரு முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்.. நேரே வீடு திரும்பி மூன்று லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைத்தார்.. பெரியவா, “இந்தப் பணத்தை ஏதாவது தர்மம் செய்ய பயன்படுத்து. எடுத்துக் கொண்டு போ.!” என்றார்.. மேலும் தமிழ்நாடு சென்று கோயில்களையெல்லாம் தரிசனம் பண்ணி வா என்று சொன்னார்..அவ்வாறே சென்று திரும்பியவர், “கல்லிலே இப்படியெல்லாம் அதிசயம் பண்ண முடியுமா? ஆச்சரியமா இருந்தது ஸ்வாமி ” என்றார்..அப்போது ,” அது போல ஒரு கோயில் இங்கேயும் கட்டலாமே!” என்று சதாரா நடராஜர் கோ‌யிலுக்கு அடி எடுத்துக் கொடுத்தார் மஹா ஸ்வாமி.ஓட்டல் முதலாளி அவருக்கு மிகவும் பிடித்தமான சிதம்பரம் கோயில் போல கட்ட அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் பேரில், பெரியவாளும் தன் மலர்க் கைகளால் கோயிலை ஆரம்பித்து வைத்து அங்கிருந்து புறப்பட்டார்..இன்று, சிதம்பரம் போலவே ‘உத்தர சிதம்பரம்’ என்ற பெயரில் அந்தக் கோயில் பிரசித்தமாகி உள்ளது…தேசிய ஒற்றுமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த கோயில் தான்.. இதன் நான்கு கோபுரங்களில் ஒன்றை மஹாராஷ்டிரமும், இன்னொன்றை ஆந்திராவும், மற்ற இரண்டு கோபுரங்களில் ஒன்றை தமிழ்நாடும், இன்னொன்றை கர்நாடகமும் கட்டிக் கொடுத்தது…கேரள மாநிலம் தேக்கு மரத்தால் அந்தக் கோயிலுக்கு மேல் தளம் அமைத்துக் கொடுத்தது..ஐந்து மாநிலங்களின் கைங்கர்யம் இந்தக் கோயிலுக்கு அமைந்தது