ஆடு மேய்க்கும் கலை/ நா.விச்வநாதன்

ஏழு ஆடுகள்
மளமளவென வளர்ந்து
பதினேழாகப் பெருகின.

நம்பத்தான் முடியவில்லை.

கருப்புப் புள்ளிகளின்
குவியலாய்
மந்தையே உருவானது.

வயிறுமுட்ட மேயவும்
கற்றுக்கொண்டது.

மே’மே’ என்ற
மகிழ்ச்சிக் குரலில்
விளங்கியது.
காற்றில் பரவி
நெடுக அறிவித்தது.

இதுதவிர வேறில்லை
லட்சியம் என்பதுபோல்
அசுரவேகத்திலான
மேய்தலழகு.

சாதுவாய்-
யோகிகள் போலான
முகச் சாயலோடு
வீடுதிரும்பவும்
கற்றுக்கொண்டன.

உக்கிரமான போதையில்
அரசமரத்தடியில்
உளறிக் கொண்டிருந்தான்
மேய்ப்பன்-

இப்போது எதையும்
கண்டுகொள்ளும்
நிலையில் இல்லை.

மழையோ, பேய்ப்புயலோ,
பெரும்காற்றோ,
ஊழி வெள்ளமோ
புரிந்து கொண்டு
சிநேகம் பேணி
மெல்லப் பேசவும்
செய்தது மந்தைக்
கூட்டம்.

பட்டினி கிடக்கவும்கூடப்
பழகியாயிற்று.

மேய்ப்பனின்றியே
கருக்கலில் பயணப்பட்டு
வெகுதூரம் மேய்ந்து
அந்தியில் திரும்ப
அறிந்துகொண்டன.

வழிதவறிப் போகாமல்
வீடடைந்து விடுகின்றன.
வெகு நேர்த்தியாய்.

சாராய நெடியோடு
உலகம் மறந்து
புரண்டு கொண்டிருப்பான்
மேய்ப்பன்
யுகக் கணக்காய்.


One Comment on “ஆடு மேய்க்கும் கலை/ நா.விச்வநாதன்”

  1. பள்ளியில் படிக்காமலேயே ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிராணிகள் ஆடுகள் தாம்! சந்தேகம் இருந்தால் ஒரு குச்சியால் ஆட்டின் முதுகை தட்டி , “Which month comes after April?” என்று ஆங்கிலத்தில் கேளுங்கள். உடனே “MAY” என்று ஆங்கிலத்தில் பதிலளிக்கும்!

Comments are closed.