
நினைவுகள் – 1
பாரதியின் சீடர் தலைமையில் தொடங்கப்பட்ட நூலகம்
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நூலகத்தின் 70 ஆவது ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளியிட்ட உடனே பலர் வாழ்த்துச் செய்தியை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றி!
காந்திய சிந்தனைக் கொண்ட நண்பர்கள் சிலர் இணைந்து சென்னை, சைதாப்பேட்டையில் 1952-ல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி நூல் நிலையத்தை தற்போது நான் நடத்திக் கொண்டு வருவது நண்பர்கள் அனைவரும் அறிந்ததே. பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் தலைமையில், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ராஜம் இராமசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது இந்த நூலகம்.
தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் சைதை பகுதி மக்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து தொடர்ந்து சேவை செய்து வருகிறது நமது நூல் நிலையம்.
இந்த 2022 ஆண்டு, நூல் நிலையம் தனது 70வது ஆண்டை நிறைவு செய்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் நமது நூலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்படப் பிரபலங்கள் வருகை புரிந்துள்ளனர். அநேகமாக, தமிழகத்திலேயே நூற்றுக்கும் அதிகமான எழுத்துலக சிற்பிகள் வருகை தந்து வாழ்த்தியுள்ள நூலகம் இது ஒன்று தான் என்று நினைக்கிறேன்.
இந்நூலகத்துடன் எனது 8 ஆவது வயதில் ஏற்பட்ட தொடர்பானது, ஏறக்குறைய 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நூலகத்துடனான நினைவலைகளைப் பற்றி நான் நேரில் கண்டும், கேட்டும் அறிந்த செய்திகளில் சிலவற்றை பல்வேறு தலைப்புகளில் இனிவரும் 24 வாரங்களில் எழுத உள்ளேன்.
அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கின்ற 70வது ஆண்டு விழாவிற்கான ஒரு தொடக்க நிகழ்வாக எழுத உள்ள இதில் அனைத்து நிகழ்வுகளையும் எழுத முடியாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே எழுத உள்ளேன்.
எழுபது ஆண்டுகள் என்னும் சாதனையை அடையும் இந்த வேளையில் பல்வேறு காலக்கட்டங்களில் நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கும், தோளோடு தோள் கொடுத்தவர்களுக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.
நண்பர்கள் இச்செய்திகளைப் படித்து தங்களது மேலான கருத்துக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
