
என்னைத் தின்ன வா பிசாசே
நிணமும் உதிரமும் படையலிடுகிறேன்
ஏழுலோகங்களின் சுகங்களை அள்ளித்தா
வாழும் போது வறுமை கேவலப்படுத்துகிறது
செத்தப்பிறகு சகபாடிகள் அசிங்கப்படுத்துவர்
என்ன எழுதி என்ன கிழிச்சு
என்னத்த சாதிக்கப்போறீங்க?
எதிர்படுபவர்களின் ஏளனம் கிண்டல்
பாவங்கள் செய்து கொண்டிருக்கிறோம்
கடவுள் மன்னிப்பாராம்
நம்பிக் கொண்டே
பாவங்கள் செய்கிறோம்
இனி பொறுக்க முடியாது
தீர்த்தே ஆக வேண்டும்
ஒரு வழியும் புலப்படவில்லை.
புரிந்தவர்கள் புலம்புகிறார்கள்
புரியாதவர்கள் பேசாமலிருக்கிறார்கள்
புரிந்தும் புரியாமல் தவிப்பவர்கள் கனவு காண்கிறார்கள்
தெரியாதவர்கள்
வணக்கம் சொல்கிறார்கள்
திகைத்து யோசிக்கிறேன்
தெரியாமலே பதில் செய்கிறேன்
எல்லாம் கடந்து செல்கின்றன
நான் கடக்கிறேன்
எதுவும் கடக்காமலில்லை.
பந்து உருள்கிறது
குழந்தை பின்னோடுகிறது
நிற்பது யாரெனத் தெரியவில்லை
உடம்பைத் தூக்கித் திரிகிறேன்
யாருடையதாக இருந்ததெனத் தெரியவில்லை
இப்போதைக்கி எனக்குச் சொந்தம்.
🦀
