இருவரும்/வாசுதேவன்

இருவரும் பக்கத்து தெருவில் வசிக்கிறோம். அவ்வபோது தொலைபேசியில் பேசுவதோடு சரி. சந்திக்கும் தருணங்கள் அபூர்வம். தற்செயலாக அவரை சந்தித்து இந்த நன்நாளில் ஆசி பெற்றேன். 73 வயது இளைஞர். அயராமல் விளிம்பு நிலை மக்களுக்கும், சிறுபான்மையைரரின் உரிமைக்களுக்காக போராடி வருகிறார். கடந்த 25 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சமூக அவலங்களை ‘உண்மை அறியும் குழு’ சார்பாக பொது களத்தின் க‌வனத்திற்கு கொண்டு வந்தவண்ணம் இருக்கிறார். பல அச்சுறுத்தல்கள் / நெருக்கடிகளை பகிர்ந்துகொண்டார். சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் வடநாட்டு இளைஞர்கள் போலி எண்கண்டவுரில் கொல்லப்பட்டப்போது அதை தீர விசாரித்து உண்மையை வெளிகொணர்ந்தற்காக கடும் நெருக்கடிக்கு ஆளாகப்பட்டவர். பல விஷயங்களை பற்றி உரையாடினோம். காந்தி, அம்பேத்கர், பெரியார்,நபக்கோவ், மாண்புமிகு ராஷ்மிகா மான்டேனா, கண்ணியமிக்க காஜல் அகர்வால் போன்ற நல்ல உள்ளங்களை இந்த தமிழ் வருட பிறப்பில் சிலாகித்து அவர்களின் பங்களிப்புகளை புதிய கோணத்தில் தெரிந்து கொண்டேன். இஸ்லாமியர்களைப் பற்றி பொதுபுத்தியின் பிழையான கருத்துகளை தொடர்ந்து மறுத்து சான்றுகளுடன் அயராமல் களத்தில் போராடி வருகிறார். காந்தியின் முக்கியத்துவத்தை தொடந்து எழுதி வருகிறவர். உயிரை துச்சமாக மதித்து ஏறத்தாழ 200 சமூக கொடூரங்களை ‘உண்மை அறியும் குழு’ சார்பாக அவர் எழுதி வெளியிட்ட அறிக்கைகள் / கட்டுரைகள் 4 வால்யூம் நூல் விரைவில் வெளிவருகிறது. எதிர்காலத்தின் நிச்சயமின்மையை கவலையுடன் பகிந்துகொண்டோம். கடந்த 30 40 வருடங்களாக கலை,இலக்கியம், ஓவியம், அரசியலில் நடந்த காத்திரமான உரையாடல்கள் இப்போது நடக்கவில்லை அல்லது அதைப்பற்றி தெரியாத இளைஞர்கள் நடத்தும் இணைய இதழ்களின் மேம்போக்கான போக்கின் அவலத்தையும் பகிந்து கொண்டோம். அவர் எழுதிய நூல்களை எனக்கு பரிசளித்தார். இதெயெல்லாம் எப்போது வாசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. தமிழ் புத்தாண்டு (சித்திரை/தை) சர்ச்சைகளைப் பற்றியும் விலா நோக சிரித்து உரையாடினோம். ஃபேஸ்புக் அறிஞர்களின் கொட்டங்கள் இந்த சுபகிருது வருடத்தில் அடங்கவேண்டும் என எல்லாம் வல்ல முண்டக்கண்ணி அம்மனுக்கு கூழும் கஞ்சியும் ஊற்றுகிறோம் என்ற பிராத்தனையோடு நண்பர் அ.மார்க்ஸீடன் நடந்த சந்திப்பு இனிதே முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் முகநூலில் சந்திப்பதில் மகிழ்ச்சி!