Ms. போதும்பெண் B.Sc/ஜெய விசாலாட்சி.

வாழ்க்கை நினைவுகள்

மனிதர்கள் மற்றும் பொருட்களின் பெயர்க்காரணங்கள் விசித்திரமானவை. 

சில ஊர்களில் மூன்றாவது பெண் குழந்தைக்கு போதும் பெண் என்று பெயர் வைப்பார்கள். போதும் பெண் என்று பெயர் வைத்தால் நான்காவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

நான் வங்கியில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பொழுது காசாளராக இருந்தேன்.அப்போது  மேரி என்ற பெயரை பணம் கொடுப்பதற்காக சத்தமாக மாரி என்று அழைத்து விட்டேன் .அந்தப் பெண் மிகவும் கோபத்துடன் என்னிடம் சண்டை போட்டார். நல்ல வேளை அது  மதக்கலவராமாக மாறாவில்லை.

தமிழில் பல பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. நான்கு கால்களை உடையதால் நாற்காலி என்பர்.  பறப்பதால் பறவை. வானில் ஊர்ந்து செல்வதால் அது வானூர்தி. நாம் இடுகுறிப்பெயர் என்று நினைப்பது கூட பிரித்துப் பார்த்தால் காரணப் பெயர்களாக இருக்கும்.

என் தகப்பனார் பொன்மலை ரயில்வே வொர்க்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார் . பொன்மலை ரயில்வே மக்களின் ஒரு பொழுது போக்கு சுற்றுலா.. பலபேர் தனி ட்ரெயின் மூலம் பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்கே ரயில் வண்டியை நிறுத்தி அந்த நேரத்தில் சமைத்து சாப்பிடுவார்கள். 

காசி ஆக்ரா தாஜ்மஹால் ஆகிய இடங்களில் சுற்றி விட்டு தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பிய சில நாட்களில் நான் பிறந்தேன்.. எட்டுமாத குறை பிரசவம் ..

அதனால் ரயில்வே ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றினார்கள். இதற்கு நன்றிக் கடனாக எனக்கு ‘ஜெய விசாலாட்சி’ எனப் பெயர் சூட்டினார் அப்பா…!

என்னை காப்பாற்றிய டாக்டர் பெயர் ஜெயா உடன் பணிசெய்த  நர்ஸ் விசாலாட்சி! நல்லவேளை எங்க அப்பா இன்னும் சில ஊழியர்கள் பெயர் சேர்க்க வில்லை!  அதற்கு முதலில் நான் நன்றி கூற வேண்டும். 

 என் பெயர் என்னுடைய பள்ளிக்காலத்தில் , கல்லூரி நாட்களில் மற்றும் என் வங்கியிலேயே யாருக்குமே கிடையாது . என் வங்கியில் 43 ஆயிரம் ஊழியர்கள் . இத்தனை ஊழியர்களில் என் பெயர் தனித்து தெரியும் இமெயில் கிரியேட் பண்ணுவது கூட மிகச் சுலபமாகப் பண்ணிவிடலாம் ஏனென்றால் என் பெயரில் நான் மட்டுமே இருப்பேன். எந்த ID வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் கிடைக்கும்.. 

இதைத் தவிர என் பெயரை மிகச் சரியாக உச்சரித்து கூப்பிடுபவர்கள் நூறில் ஒருவர் இருக்கலாம்…. அப்போதெல்லாம் எனக்கு அப்பா  மேல் கோபம் வரும்.

ஜெய  விஷா லட்சுமி,ஜெய விஜயலட்சுமி ஜெயலஷ்மி இப்படியெல்லாம் எல்லோருமே தப்பாக உச்சரிப்பார்கள். தொலைபேசியில் என் பெயரை ஜெயா என்று மட்டும் கூறினால் மற்றொரு முனையில் இருப்பவர் ஸ்ரேயா , மாயா என்று காதில் விழுந்த வண்ணம் கேட்பார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் என் பெயரை ஸ்டைல் பெயராக சொல்கிறாரே என்று. 

சில சமயங்களில் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் பெயர் மாற்ற முயற்சி செய்வார் அது போலெல்லாம் கூட யோசித்து இருக்கிறேன். இரண்டு முதல் நான்கு எழுத்துக்களில் ஸ்ரீ லக்ஷ்மி, சுஜாதா, காயத்ரி, லட்சுமி,  ராதா, தேன்மொழி போன்று சிறிய பெயர்களாக மாற்றி கொள்ளலாம் என்றுகூட நினைத்திருக்கிறேன். ஆனால் இன்றுவரை பெயர் மாற்றம் செய்ய வில்லை.

உன் பெயரில் ஜெயம் உள்ளது .. எப்போதுமே வெற்றிதான் என்பார் அம்மா..

இப்போது யோசித்துப் பார்த்தால் பெயரால் ஒரு பெரிய சேதாரம் ஒன்றும் ஏற்படவில்லையெனவே தோன்றுகிறது.  என்னை விட அபூர்வமான பெயர்களை நான் கேட்டதும் காரணாமாக இருக்கலாம்..  எந்தப் பெயரும் போகப் போகப் பழகி விடும்.

வாழ்க்கையும் நன்றாகவேதான்  போய்க்கொண்டிருக்கிறது.. 

பெயர் அமைவது என்பது இறைவன் அருள் போலும்.. பலர் தவறாக உச்சரித்தாலும் பொறுமையாக என் பெயரை புரிய வைக்க ஒவ்வொரு இடத்திலும் பொறுமையுடன் முயற்சிக்கிறேன்.

3 Comments on “Ms. போதும்பெண் B.Sc/ஜெய விசாலாட்சி.”

  1. எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது என்று வடிவேலு மாதிரி மிரட்டாவிட்டாலும், நகைச்சுவை இழையோட எழுதப்பட்டிருப்பதை பாராட்ட வேண்டும்.
    என்ன காரணமோ, பெண் எழுத்தாளர்கள் நகைச்சுவை எழுதுவதில்லை.
    ஜெய விசாலாட்சிக்கு ஹ்யூமர் சித்தித்து இருக்கிறது.
    அச்சுக்குதிரை ஏறிய முதல்படைப்பில் முத்திரை பதித்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.