எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

உன் வாசலருகே,
உன் அடுக்கக மாடிப்படி கீழே
இருந்த தாய்ப்பூனை தன் குட்டிகளுடன்
காணாமல் போய்விட்டது
போகும் போது உன் வட்டில்களையும்
உன் தரையையும் சுத்தமாக
நக்கித் துடைத்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை
இருந்த சுவடே இல்லாமல்
வெட்டவெளி காட்டி
உன் தலைமுடியை
ஒட்ட கத்தரித்திருக்கிறாய்
வழக்கத்தைவிட கனமான
கண்ணாடியை அணிந்திருக்கிறாய்
உன் லினன் சட்டையை சற்றே கோணலாக
முழுக்கைகளை சமமின்றி சுருட்டிவிட்டு
உன் கால்சராய் கணுக்காலுக்கருகே சுருங்கி
உன் இடுப்பில் அது நழுவிக்கொண்டிருக்கிறது
என்பதாக, எதைப் பறிகொடுத்தாய்
என்னிடம் ஏதுமில்லை என்கிறாய்
இளஞ்செடிப்பண்ணையில் வாங்கிய
கன்றுகள் தங்கள் வேர்களைப் பொதிந்த
சிறு பிளாஸ்டிக் பைகளை பூமி என்றுதானே நினைக்கும்
உண்மையில் அவை எங்கே பயிராகும்
என யாருக்கோ சொல்கிறாய்
உன் பாதங்களுக்கடியிலுள்ள பிடி மண்ணை
காலுயர்த்தி மறுகாலுயர்த்தி
உற்றுப் பார்க்கிறாய் நெடுநேரமாய்
உன் கால்சராய் மேலும் நழுவுவதன்
பிரக்ஞையற்று