இலக்கிய இன்பம் 44/கோவை எழிலன்

கல்லலாம் உலகினை

கம்பனின் வியத்தகு உவமை நயத்திற்கு சான்றாக விளங்கும் ஒரு பாடல்.

கும்பகர்ணன் இராவணனுக்கு இராகவனை வெல்ல முடியாதென்று அறிவுரை கூறுகிறான். இதுவரை இராவணன் தன் ஆற்றலால் செய்ய முடியாத செயல் என ஒன்று இல்லாமல் இருந்தவன்.

அவனால் முடியாத செயலை உவமையாகக் கூற விரும்பும் கும்பகர்ணன் உன்னால் உலகத்தையே அகழ்ந்து எடுக்க முடியும். உலகிற்கே வேலி அமைக்கவும் இயலும். ஆனால் எவ்வாறு உன்னால் சீதை மேனியைத் தழுவ இயலவில்லையோ அது போல் வலிமை மிக்க தோள்களைக் கொண்ட இராமனையும் வெல்ல முடியாது என்று கூறுகிறான்.

கல்லலாம் உலகினை;
வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி
இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது,
சீதை மேனியைப்
புல்லலாம் என்பது
போலுமால்-ஐயா!”