கம்பன் கவியமுதம்—44 வளவ. துரையன்

போட்டிகள் போட்டிகள்

          பகலினொடு இகலுவ படர்மணி மடவார்
          நகிலொனொடு இகலுவ நளிவளர் இளநீர்
          துகிலொனொடு இகலுவ சுதைபுரை நுரைகார்
          முகிலினொடு இகலுவ கடிமண முரசம்                     [77]

[ பகல்=சூரிய ஒளி; நகில்=முலை; துகில்=ஆடை; சுதை புரை நுரை=பால் மீது படர்ந்த நுரை]

இப்பாடலில் உள்ள இகலுதல் என்பதற்கு மாறுபடுதல் அல்லது போட்டியிடுதல் என்று கொள்ளலாம்.
கோசல நாட்டில் எங்கும் பரவிப் படர்ந்திருக்கும் மணிகள் சூரியனுடன் அதற்குச் சமமாக ஒளி வீசப் போட்டியிடுகின்றன. அந்நாட்டில் இருக்கும் பெருமை மிக்க இளநீர்கள் மகளிருடைய தனங்களோடு போட்டியிடுகின்றன. மங்கையர்கள் அணிந்துள்ள வெண்பட்டாடைகள் பாலின் மேல் படர்ந்துள்ள நுரையின் வெண்மையுடன் போட்டியிடுகின்றன. திருமணங்களில் அடிக்கப்படுகின்ற முரசின் ஒலி கார்மேகங்களின் இடி ஓசையோடு போட்டியிடுகின்றன.
மணிகள், மார்புகள், ஆடைகள், முரசுகள் ஆகியனவற்றின் அழகும் பெருமையும் இப்பாடலில் கூறப்படுகின்றன.