2.இதுவும் பாட்டி வீட்டில் அடி‌க்கடி சொல்லும் ஒரு கதை/கனகா ரமேஷ்

வானவில் நாட்கள்
(நினைவலைகள்)

தூரத்து சொந்த மான ஒரு பெண்மணியை அவரது கணவரும் மாமியாரும் மிகவும் கொடுமை படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

அந்த பெண்மணி ரொம்பவே சாது. சூது வாது தெரியாது.

என் தாத்தா வக்கீல் மற்றும் மு‌ற்போ‌க்கு‌ எண்ணமும் கொண்டவர் என்பதால் அந்த பெண்ணின் விதவை தாயாரும் தம்பியும், அவரை அழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றனர்.

பெண்ணின் தம்பி அப்போது படித்து கொண்டிருந்தார். அவ்வளவாக வசதி இல்லாத குடு‌ம்ப‌ம். இரு‌ந்தாலு‌ம் அக்காவைப் பார்க்க போகிறோமே என்று பை நிறையப் பொருட்களை வாங்கி கொண்டு சென்றார்கள். பேச்சு வார்த்தை சுமுகமாக முடியவில்லை. அந்தப் பெண்ணின் மாமியார் என் தாத்தா உட்பட எல்லாரையும் அவமதித்து விட்டார்.

ஆத்திரமடைந்த இந்த பையனை என் தாத்தா அடக்கி விட்டு , சரி வா போகலாம். பி‌றகு பேசலாம் என்று சமாதான படுத்த, மேலும் ஆத்திரம் அடைந்த ,அ‌ந்த மாமியார் கிழவி, நீங்க கொண்டு வந்ததையெல்லாம் திருப்பி எடுத்துண்டு போங்க,” என்று கத்தினாள்.

உள்ளே நாலு கால் பாய்ச்சலில் சென்ற அந்தப் பெண் தன் தம்பியிடம், “இந்தா டா, ரெண்டு கை இருக்கு, ரெண்டு பை இருக்கு,” யென்று சொல்லி, தானும் இரண்டு பைகளுடன் கிளம்பி விட்டாள்.

இன்றும் அந்த முகம் அறியா மாமி எங்களுக்கு ஜான்சி ராணி தான்.

One Comment on “2.இதுவும் பாட்டி வீட்டில் அடி‌க்கடி சொல்லும் ஒரு கதை/கனகா ரமேஷ்”

Comments are closed.