ஸிந்துஜாவின் “வானில் புரளும் கடல் ” கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி/ஸிந்துஜா

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பதினோரு கட்டுரைகளில் வளைய வருபவர்கள் படைப்புத் துறையில் தலைசிறந்த கலைஞர்களாகத் தம்மை நிறுவிக் கொண்டவர்கள். பொது மனிதர்கள் கொண்டாடும் ஜனரஞ்சகத்தை உயர்த்திப் பிடிக்காதவர்களாக அவர்களது நடமாட்டம் நிகழ்ந்து வந்துள்ளது. பெரும்பாலான இக்கலைஞர்களின் வாழ்க்கை தந்த கடும் துயரங்களையும் மனக் கஷ்டங்களையும் அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டு எதிர்நீச்சல் போட்டு சிகரத்தை அடைந்தார்கள் என்பதை இக்கட்டுரைகள் விவரிக்கின்றன.

சமூகமும், அரசும்,மதமும் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறும் குணம் மிக இயல்பாக இக்கலைஞர்களின் படைப்புகளில் வெளிவந்த வண்ணம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மீறலின் உள்ளோட்டமும் சுதந்திரத்தின் நாடி பிடித்துப் பார்ப்பதாக இருக்கிறது. நியமிக்கப்பட்ட விதிகளைக், கோட்பாடுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவதில் காலங்காலமாக மக்களிடையே ஒருவித மந்தைத்தனம் (block thinking) பரவியிருக்கிறது. ஆகவே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் சௌந்தர்யத்தைக் காண விரும்பாது கண்ணை மூடிக் கொள்வதில் சௌகர்யம் காண்பவர்கள் மீறலை அறியாத
வர்கள். மீறல் அவர்களைக் கலவரப்படுத்துகிறது. சிலசமயம் முனகலாகவும் பல சமயம் பெரும் இரைச்சலாகவும் இந்த எதிர்ப்புக் குரல்கள் எழும்புகின்றன. வால்ட் விட்மன் ஒரு இளம் கவியாகத் தன் கவிதைகளை வெளிக்கொணர்ந்த போது விமரிசகர்களிடமிருந்து எழுந்த வலுவான கண்டனக் கணைகள் அவரது படைப்புத்
திறமையையே ஆழப் புதைத்திருக்க வேண்டும். ஆனால் விட்மன், ‘என் ஆன்மாவுக்குச் சரியானது என்று பட்டதை எழுதியே தீருவேன்’ என்று கலங்காமல் தன் படைப்புகளில் கவனத்தைச் செலுத்தினார். அவர் தினத்து பிரபல படைப்பாளியும் விமரிசகருமான எமர்சனின் ஆதரவுக் குரல் (“ஒப்பிட முடியாத விஷயங்களை ஒப்பிட முடியாத மொழியில் சொன்ன கவி”) ஒன்றே அவரை வழி நடத்திச் சென்றது. சிந்திக்கும் திறன் வாய்ந்த ஒரு கலைஞனின் சுய சிந்தனைப் பலத்தின் மூலம் ஒரு மீறல் நிகழும் போது இத்தகைய கலவரக் குரல்களால் அந்த மீறலின் சக்தியையும் உண்மைத் தன்மையையும் நசுக்கி விட முடியாது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தக் கட்டுரைத் தொகுதியில் இடம் பெறும் படைப்பாளிகள் எழுத்து, திரைப்படம் ஆகிய ஊடகங்கள் மூலம் தத்தம் தனித் தன்மையையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியவர்கள். கடுமையான உழைப்பும், உண்மையைத் தேடி அடையும் தரிசனமும் மட்டுமே தங்கள் படைப்புகளைக் காலங் கடந்து நிற்கச் செய்யும் வல்லமை பெற்றவை என்று உணர்ந்திருந்தார்கள். அவர்களின் தேடல்களின் முன்பு சுயநலமும், பொருள் ஆதாயமும் அர்த்தம் இழந்த சப்தங்களாக இருந்தன. அவர்களின் தேடல்களில் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் நாம் காண முடிகிறது. ஹெமிங்வே அவரது ‘சன் ஆல்சோ ரைசஸ்’ என்ற நாவலிலும் ‘டெத் இன் தி ஆஃப்டர்நூன்’ என்னும் கட்டுரைத் தொகுப்பிலும் எருதுச் சண்டை ( bull fighting) பற்றி விஸ்தாரமாக எழுதினார். இதற்கு அடிப்படையாக அவர் ஸ்பெயினில் பங்கு பெற்ற பல எருதுச் சண்டைகளின் அனுபவமே உறுதுணையாக இருந்தது. கற்பனையில் உருவாக்கப்படும் எழுத்துக்களை அவர் நிராகரித்தார். ‘எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ எனும் நாவலின் கடைசிப்பக்கத்தை 39 தடவை திருத்தி எழுதிய ஹெமிங்வே “ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் படைப்பாளியைப் பொறுத்த வரை அது இறந்து விடுகிறது !” என்றார். ஞானிகளுக்கான மனப்பாங்கை இந்த வரியில் ஒருவர் உணர முடியும்.