
குடிசை ஓரத்தில் மண்ணடுப்பில் பூனை தூங்குகிறது. ஒடுக்கு விழுந்த கஞ்சிப் பாத்திரம் மூலையில் காய்ந்து கிடந்தது. தென்னங்குச்சிக்குத் துணி சுற்றியதைப் போல ஓரத்தில் சுருண்டு கிடந்தாள் அம்மணி. உப்பிய வயிற்றுடன் எலும்பும் தோலுமாய் நான்கு ஜீவன்கள், வாலாட்டும் சவலை நாயுடன் அவனை வெறித்தன! எண்ணைப் பசையற்று மண்டிக்கிடந்த முடிகள். சிவந்து, உலர்ந்த கண்களில் இன்னும் சிறிது நம்பிக்கை இருந்தது. ஏதாவது செய்ய வேண்டுமே – கூட்டத்துடன் கலந்தான்…
திருநீறு பூசினான். பால்குடம் சுமந்தான். அலகு குத்திக்கொண்டான். தீ மிதித்தான். வாரம் தவறாமல் நெய் விளக்கேற்றினான். உதவி செய்த கூட்டத்துக்கு நன்றி சொன்னான்.
ஆனாலும் விருப்பம் ஏதும் நிறைவேறவில்லை!
கூடாரம் மாறினான். கருப்புச் சட்டை அணிந்தான். பகுத்தறிவாளன் ஆனான். மூட நம்பிக்கைகளை ஒதுக்கச் சொன்னான். ‘நீ இல்லையென’ உரத்துக் கூவினான். ‘அடடா, இதோ ஒரு விடிவெள்ளி’ என ஆராதித்து, ஆர்பரித்தது தொண்டர் கூட்டம்!
நிறைவேறா விருப்பம் இப்போது ஏதுமில்லை!
வானம் பார்த்துக் கை கூப்பினான்….
“ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு! ” கண்ணில் நீர்மல்கக் வேண்டிக்கொண்டான்!
