சத்யதேவ்-ஒரு குறுங்கதை

கந்தசாமிக்கு, அவன் பெயரை பிடிக்காது.  அது அவன் கொள்ளுத் தாத்தா பெயர் என்பதால் அவரையும், அவருக்கு கடவுள் நேரில் வந்து அவருடன் தங்கியிருந்த கதைகளினால், கடவுளையும்,  பிடிக்காது.  தன் பெயரை கான்ஸ் என்று சுருக்கி பீட்டர்விட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கெவர்த்தி.   

“கடவுளால் அவராலேயே தூக்கமுடியாத கல்லைப் படைக்க முடியுமா” என்று வம்பிழுப்பான்.  தன் மேல் நம்பிக்கை இல்லாதவருக்குதான் கல் மேல் நம்பிக்கை என்று சாடுவான்.   

இப்படி இருந்தவனுக்கு ஒருநாள் காலில் பாம்பு சுற்றியது.  “ஐயோ!” என்று அலறியவனுக்கு “கடவுளே காப்பாற்று” என்று சொன்னால் கயிராகும் என்ற குரல் கேட்டதனால்,  “கடவுளே” என்று  கத்தியதனால், பாம்பு கயிரானது.  அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை, சத்தியமாய் காலை சுற்றியது பாம்பு தான்.  ஆனால் வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். “என்னால் நடிக்க முடியாது. ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்கவிடு” கண்ணில் நீர் மல்க வேண்டிக்கொண்டான்.