
காரணங்களுக்கு இடமற்ற பொழுது
இரவையுணர்த்தி சிமிட்டும் நெடுஞ்சாலையின்
தொடர் விளக்குகள்
நீண்ட நேர நிசப்தத்தை அகற்றும்
வேகவழித் தடத்தில் கணரக வாகனம் விரைந்து மறைய
எஞ்சின் சத்தம்
எப்பக்கமும் திரும்பிப் பார்க்காமல்
மஞ்சள் கோட்டை கடக்கும் பழுப்புநிற நாய்
தார்ச்சாலையின் நீட்சியை நோக்கி குரைத்துவிட்டு
அப்பக்கம் தள்ளி நிற்பதை பார்க்கையில்
சிறுபொட்டாய் மின்னும் வாகனத்தின் இருமுன்விளக்குகள்
அருகில் துல்லியமாகி தூரத்தில் வடிவிழக்கையில்
எதற்காக பேருந்து நிறுத்தத்தில் நிற்கின்றேன்
டயர் உராயும் சத்தத்துடன் நின்ற பேருந்தின் எண்
என்னோடு தொடர்புடையது
ஒருமுறை அந்த எண்ணை உச்சரிக்க
அது இந்தப் பேருந்தாக இல்லாது போனாலும்
அதிலிருந்து இறங்குபவர்களில் ஒருவர்
நான் கிளம்பி வந்த இடம்வரை
உடன்வர வாய்ப்புள்ளது.
