கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்/வாசுதேவன்

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் முறிந்த மண வாழ்வு பற்றி சில நாட்களாக செய்தி அடிபடுகிறது. தினேஷ் தன் பால்யகால சிநேகிதி நிகிடா வை திருமணம் செய்தார். தினேஷும் மற்றொரு கிரிக்கெட் வீரர முரளி விஜயும் நெருங்கிய நண்பர்கள். நிகிடாவுக்கும் முரளிக்கும் காதல் அரும்பியது. நிகிடா கர்ப்பமானார். குழ்ந்தையின் தகப்பன் முரளி விஜய். தினேஷ் கார்த்திக் நிகிடாவை விவகாரத்து செய்தார். மன அழுத்தத்திற்கு ஆளாகி கிரிகெட்டிலிருந்து வெளியேறினார். ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் தினேஷ்க்கு நம்பிக்கை ஊட்டி மீண்டும் கிரிகெட்டுக்கு இழுத்துவந்து மறுவாழ்வு தந்தது மட்டுமல்லாமல் அவரை திருமணம் செய்துகொண்டார். தினேஷ் கார்த்திக்கும் சரி, முரளி விஜய் உம் இதுவரையில் இதைப்பற்றி வாயை திறக்கவில்லை. கண்ணியத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

இதுமாதிரி விசித்திரமான உலகப்புகழ் பெற்ற காதல் சம்பவம் உண்டு. கிதார் மேதை எரிக் க்ளாப்டன் காதல்கள் விவகாரமானவை. முதல் காதல் டிரம்பட் கலைஞன் மில்ஸ் டேவிஸ் இன் இரண்டாம் மனைவியோடு கொட்டம் அடித்தார். சில வருடத்தில் பிரிந்தார்கள்.அவருடைய இரண்டாவது காதல் சுவாரஸ்யமானது. பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிசனும், எரிக் க்ளாப்டனும் நெருங்கிய நண்பர்கள். ஜார்ஜ் மனைவி பட்டே பாய்ட்க்கும், எரிக் க்ளாப்டனுக்கும் காதல் மலர்ந்தது. பெருந்தன்மையான ஜார்ஜ் இருவரையும் திருமணம் செய்து வைத்தது மட்டுமல்லாமல் க்ளாப்டனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். இதுவும் கிளாப்டனுக்கு விவகாரத்தில் முடிந்தது. பிறகு க்ளாப்டனுக்கு ஏகப்பட்ட காதல்கள். எதுவும் நிலையாக இருந்ததில்லை. க்ளாப்டன் ஷோக்கு பேர்வழி. போதை பிரியர். இப்போதும் 77 வயதில் கிடாரில் உலகை மண்டியிட வைக்கிறார்.

மனித உறவுகள் சிக்கலானவை. உடல் ரீதியான வேட்கை என மட்டும் சுருக்கிவிட இயலாது. உறவில் உள்ள ஒரு போதாமை வேறு பக்கம் திசை திருப்ப வைக்கிறது. தினேஷ் கார்த்திக்கின் மனைவி செய்தது நமக்கு துரோகமாக தெரிந்தாலும் அந்தரங்கத்தில் என்ன நடந்தது எனத் தெரியாது. இருவருமே மவுனத்தை கடைபிடிக்கும்போது அதைப்பற்றி தீர்ப்பு சொல்வது சரியல்ல. பல சமயங்களில் ஆண் பெண் உறவுகள் தர்க்கத்தில் அடங்காது . ஆனானப்பட்ட ஜே.கிருஷணமூர்த்தி, காந்தியும் கூட இந்த வலை(லி) யிலிருந்து தப்பமுடியவில்லை. சும்மாவா சொன்னார்கள் சித்தர்கள் “மனம் ஒரு குரங்கு”….