
அப்பா ஜவுளி வியாபாரம் என்பதால் ஜவுளி கொள்முதலுக்கும் பணம் வசூல்செய்யவும் வட நாடுகளுக்கு செல்வது வழக்கம் .நான் ஆசிரியப் பணியை விட்டதுமே என் தந்தையிடம் ’’இனி நான் வடநாட்டுக்கு செல்கிறேன்’’ என்று சொல்லி விட்டேன்…அதன்படி புனே, பாம்பே, கல்கத்தா, நாக்பூர், டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்று இரண்டு மூன்று மாதங்களாவது தங்க வேண்டியிருந்தது. அப்போது அந்தந்த ஊரின் இயல்புகளை அப்படியே என் எழுத்தாள மூளை கிரகித்துக்கொள்ளும் . ரயில் பயணங்களில் பார்க்கும் வேற்று நகரத்து மக்கள் மற்றும் அங்கு நிகழும் சம்பவங்களையும் குறித்துக் கொள்ளும் .அவை அப்படியே கதை வடிவமும் பெற்று விடும் .
அன்றைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சென்னை நகரத்தை மட்டுமே களமாக அமைத்து கதைகளை தந்தனர் .இந்த நேரத்தில் சென்னையைத் தாண்டி வடநாட்டின் இடங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளை நான் தொடர்ந்து தந்ததால் குமுதத்தில் என் கதைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது .உதாரணமாக “சலார்ஜங் மியூசியத்தில் சந்தித்தவள்” எனும் கதை ஹைதராபாத்தில் நடந்ததாகவும் “கட்டபிரபா அணைக்கட்டில் ஆசையாய் ஒருத்தி” எனும் கதையில் ஹுப்ளி நகரத்தையும் காட்டியிருந்தேன் .
இப்படி என் கதைகளை வாசிப்பவர்கள் வர்ணனைகளின் மூலம் என்னுடன் சேர்ந்து அந்த நகரத்தை சுற்றிப் பார்த்தார்கள் .அவர்களுக்கு சென்னையைத் தாண்டி வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது என் கதைகள் .அது மட்டுமல்ல..ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அவற்றின் ரசிகர்களுக்கேற்ப வெவ்வேறு வகையான எழுத்து பாணியும் இருந்தது .அதையும் நான் கவனித்து பின்பற்றினேன் .முக்கியமாக எளிமையாகவும் புரியும்படியும் இருந்ததால் என் கதைகளுக்கு வரவேற்பு அந்தப் பத்திரிக்கைகளே எதிர்பாராத வண்ணம் அமோகமாக இருந்தது .
சேலம் சுபா பேட்டியில்
ராஜேஷ்குமார் கல்கி இதழுக்காக
தகவல் : ஆர். கந்தசாமி
