சரிந்த மணல்

பானுமதி ந 

சரிந்த மணல்

சுருங்கும் விரியும் வெளிச்சப் புள்ளிகள்

ஒத்தைத் தடம்

பதிந்ததோ பதிக்கக் காத்ததோ

விரைந்த குளம்புகள்

சருகாய்ப் புரண்டு புதைந்த கோணம்

கோட்டோவியத்தின் கோணல் போல

உச்சி தனில் ஒற்றை விளக்கு

அணைந்தணைந்து மிச்ச வெளியில்

அலைப்புறும்

கைவிடப்பட்ட வழிச் சத்திரம்

இரசமற்ற கண்ணாடி

கொத்தும் குருவிகள்

புல்லரிசிகள் எங்கோ சிதறிக் கிடக்க

அதில் பெயரெழுத மறந்தவன் யாரோ?

வெள்ளிச் சரிகை கானல் நீரில்

கையள்ளும் கனவில்

சரிந்த மணல்.