திருவிழா/-நாகேந்திர பாரதி


” நட்ட கல்லும் பேசுமோ ” என்ற சித்தர் பாடலின் உள்ளர்த்தம் புரியாமலேயே அதை வைத்து நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் ஆனது வேடிக்கைதான். தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில் இருந்து ஏற்பாடுகள் செய்ய வேணுவால்தான் முடியும் என்று உசுப்பி விட்ட பெரியவர்கள் வார்த்தைக்கு வளைந்து விட்டான் . தலைமுறை தலைமுறையைத் தொடரும் திருவிழாத் தகராறு .

அன்று கருப்புசாமி தேர் வடக்குத்தெருவில் நுழைந்தபோது , வேணு ஏற்பாடு செய்திருந்த கரகம், நாயனம், சைக்கிள் தீப்பந்தம் தெருவை மறைத்திருந்தன . அப்போது தேர் உள்ளிருந்து வெளியேறிய அரிவாளும் ஈட்டியும் , வடக்குத்தெரு ஆட்கள் மேல் வீசப்பட , இதற்காகவே காத்திருந்ததுபோல், இவர்கள் கைகளிலும் அரிவாள். எப்படி இது. வேணுவுக்கே தெரியாத ஏற்பாடு . குறுக்கே புகுந்த வேணுவின் தோளில் விழுந்தது வெட்டு. எறியப்பட்டு விழுந்த அவன் முன்னே கோயில் கொடிக்கம்பம் .

“ஆண்டவனே, என்னை நாத்திகனாகவே இருக்கவிடு ,” கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.

————–