
என் தாத்தாவின் விசிட்டிங்க் கார்டில் அவர் பெயர் பிசுபாட்டி ஏ தொரைஸ்வாமி ஐயா என்றிருக்கும். அதென்ன பிசுபாட்டி?(Pisupati) தெலுகு மக்களுக்கு ‘இண்டிபேரு’ அதாவது வீட்டுப் பெயர் உண்டு. பிசுபாட்டி என்பது வீட்டுப்பெயர். சில சமயம் சொந்த ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். அதேபோல் தெலுகு பிராமண சமூகத்தில் ஐயர்-ஐயங்கார் கிடையாது. எல்லாருமே ஐயா தான். என் தாத்தாவின் அப்பா ஆதிசேஷையா. அவருடைய அப்பா ஜகன்னாதையா. அவர் மூதாதையர் எல்லாருமே வசித்தது ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் பிறகு மதுரையிலும் தாம். என் தாத்தா பிறந்தது 1901இல். பத்து வயதுக்குள் அம்மா அப்பா இருவரையும் இழந்துவிட்டார். தன் சகோதரர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
பதினான்குப் பதினைந்து வயதுப் பையனாக இருக்கும் போது ஒரு மாலை வேளை தன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வீட்டுத் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தாராம். (மிகவும் அழகாக இருப்பார்.) அப்போது வீட்டையொட்டி இருந்த காட்டுப்பகுதியின் விளிம்பில் நின்றபடி ஓர் அழகான பெண் அவரை அருகே வருமாறு சமிங்ஞை செய்தாளாம். இவருக்கு எழுந்து போனது நினைவிருக்கிறது. அடுத்த நாள் மாலை தான் வீடு திரும்பியிருக்கிறார். இடையில் நடந்தது எதுவும் நினைவிலில்லை.
அன்றிலிருந்து இவர் நடந்தால் பின்னால் யாரோ ஒரு பெண் கூட வருவது போல் மெட்டி சத்தம் கேட்குமாம். அவருக்கு மட்டும் தான் கேட்கும். அதனால் அவர் எங்கும் தனியாகப் போவதைத் தவிர்த்தார்.
காலம் உருண்டோடியது. திருமணமாயிற்று. என் அம்மம்மா (பாட்டி) ஒரு வீரமங்கை. பயம் என்பதே அறியாதவர். இருவரும் திருமணமான புதிதில் திருவனந்தபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் இருந்திருக்கிறார்கள். அப்போது ஒரு நாள் என் அம்மம்மாவுக்கு திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டு இரவெல்லாம் நிற்காமல் போய் அவரால் புழைக்கடைக்குப் போக எழுந்திருக்கவும் முடியவில்லை. ஊருக்குப் புதிது. இரவு வேளையில் எந்த மருத்துவரைக் கூப்பிடுவது என்றும் தெரியவில்லை.
அப்போது திடீரென்று தாத்தாவுக்கு மெட்டியொலி கேட்டதாம். அந்த ஒலி அருகாமையில் வந்தபோது அந்த அறையில் இருந்த நிலைக் கண்ணாடி காற்றெதுவும் அடிக்காமலே மடாரென்று குப்புற விழுந்ததாம். அதன் பின்னால் ஒரு புத்தம்புது மாந்த்ரீகத் தகடு அடிக்கப்பட்டிருந்ததாம். தாத்தா பதறிப்போய் அதைத்தூக்கி வெளியே விசிறியடித்தாராம். அம்மம்மாவுக்கு உடனே இரத்தப்போக்கு நின்றுவிட்டதாம். தாத்தாவின் மீது ஆசைப்பட்டு அந்த வீட்டுப்பெண் அப்படிச் செய்துவிட்டதாகப் பிறகு சொன்னார்களாம். அதிலிருந்து, தாத்தாவை கேலி செய்து கொண்டிருந்த என் அம்மம்மா அந்த மெட்டியொலியை மதிக்க ஆரம்பித்தார்.
தாத்தாவுக்கு ரயில் பயணம் என்றால் கொள்ளைப் பிரியம். ஒருமுறை நள்ளிரவில் ஒரு ஊரில் இறங்கியிருக்கிறார். அந்த ரயில் நிலையத்தில் இரவு தங்கிக் கொள்ள ‘ரிடையரிங்க் ரூம்’ இருக்கும் என்று நம்பிப் போனவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் ஊருக்குள் போய் ரூம் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கையை விரித்துவிட்டாராம். வெளியே வந்தால் கும்மிருட்டு. தாத்தாவை மெட்டி பயம் பிடித்துக் கொண்டது. வேறு வழியில்லாமல் ஹோல்டாலையும் கூஜாவையும் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார். ‘ஜலெய்ங்க்!’ காலருகே நான்கு இரும்புச் சங்கிலிகளைத் தரையில் அறைந்தாற்போல் பெரிய சத்தம்! தாத்தா விதிர்விதிர்த்துப் போனாராம். அடுத்த அடியெடுத்து வைத்தால் மீண்டும் அச்சுறுத்தும் அதே சங்கிலி அறையும் சத்தம்! நீண்ட பாதையின் முடிவில் மங்கலாக ஒளி. அதுவரை எப்படிப் போவது? வியர்த்துப் போயிருந்தவரை ‘சங்கிலிப்பிசாசு’ விட்டபாடில்லை.( அடுத்த நாள் அந்த ஊரில் குறிப்பிட்ட பெயர்!) மீண்டும் மீண்டும் செவிப்பறையைக் கிழிப்பது போல் சங்கிலிகளைத் தரையிலோங்கி அடிக்கும் சத்தம். உடனே வந்து விட்டது மெட்டியொலி! தாத்தாவின் மேல் அப்படியொரு அன்பு வைத்திருந்த அந்த அமானுஷ்யம் விட்டுக் கொடுக்காமல் உதவிக்கு வந்தது! சங்கிலிச் சத்தம் நின்றது. (சங்கிலிப் பிசாசை விட ‘மெட்டி அமானுஷ்யத்துக்கு’ சக்தி அதிகம் போலும்!) கூடவே மெட்டியொலி துணை வர தாத்தா தைரியம் பெற்று ஊருக்குள் போய் ஒரு ஹோட்டலை அடைந்தாராம். இப்படி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் அவரைக் கூடவே இருந்து காப்பாற்றியது அந்த மெட்டியொலி. பிறகு அந்த ஒலி கேட்கவில்லை என்று சொன்னார் தாத்தா. என் அருமை தாத்தா 91 வயது வரை இருந்து 1992இல் காலமானார்.
கீழே இருக்கும் படம் எங்கள் மந்தைவெளி வீட்டில் என் சித்தி திருமணத்தின் போது எடுத்தது. 1957. மாப்பிள்ளை அருகில் இருப்பவர் என் தாத்தா.
பின் குறிப்பு: ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவை நடத்திய ஜகன்னாத ஐயர், இவருடைய தாய் மாமா. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனப்படும் தத்துவமேதை ஜே கே, இவருடைய (ஒன்றுவிட்ட?) தமக்கை மகன்.

Thank you vrutcham
I’ll forward to shobhana madam