உலக புத்தக தின வாழ்த்துகள்/சுரேஷ் சுப்பிரமணி

விரைவில் வீடு மாறலாம் என நினைத்திருந்தபடியால் முதலில் வீட்டில் உபயோகமற்று உள்ள பொருட்களை கழித்து கட்டி விடலாம் என முடிவு செய்தேன். மேல் அலமாரிகளிலும் பரண்களிலும் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியேற்றினேன் அதில் பிள்ளைகளின் பழைய பாட புத்தகங்களும் நோட்டுகளும் அடக்கம். அதில் பிள்ளைகளின் கையெழுத்தை பார்க்கும்போது கடந்தகால ஞாபகங்கள் வந்து மனதை கிளர்ந்தது. பின் இரண்டு அட்டை பெட்டிகளில் நான் போட்டு வைத்திருந்த புத்தகங்கள். எல்லாம் பழைய சிற்றிதழ்கள், சிறப்பிதழ்கள், தீபாவளி மலர்கள், பழசாகிப்போன கதை புத்தகங்கள்…Etc. அனைத்தும் மீள் வாசிப்புக்கு இருக்கட்டும் என பத்திரப்படுத்தி வைத்தது. ஆனால் மீள்வாசிப்பென்பது மிக மிக அரிதாகத்தான் ஏற்படுகிறது நமக்கு. புதிய புத்தகங்களும் மின்னிதழ்களும் இணைய இதழ்களும் சேரந்துகொண்டே இருக்கும்போது பழைய புத்கங்களை எங்கே மீள்வாசிப்பு செய்வது?. இவற்றையெல்லாம் யாருக்காவது கொடுத்து விடலாமென்றால் ஊரில் வாசிப்பு பழக்கமுடைய மனிதர்களை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒன்றிரண்டு பேரை ஃபோன் செய்து புக்ஸ் வேண்டுமா என கேட்ட போது , ‘புக் படிக்க யாருக்குய்யா இங்கே நேரம் இருக்கு?’ என பரிதாபமான பதில் வந்தது. சரி நூலகத்திலாவது கொடுக்கலாம் என்றால் புத்தகங்களை வாங்க அவர்கள் போடும் கண்டிஷன்களை பார்த்து ‘ரொம்ப நல்லதுங்க சாமி’ என நினைத்துக் கொண்டு அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். என் வீட்டிலுள்ளவர்களும் ‘இதைத்தான் நீங்க படிச்சிட்டீங்களே…இன்னும் எதுக்கு இங்கே தூசு ஏறி வைத்துக்கொண்டு…டிஸ்போஸ் பண்ணுங்க’ என நெருக்கினார்கள். வேறுவழியின்றி அனைத்தையும் இரண்டு மூட்டைகளில் கட்டி தெருவில் வந்த பழைய பேப்பர் கடைக்காரரிடம் போட்டு விட்டேன். புத்தக மூட்டைகளை எடையில் வைத்து சரிபார்த்து அதை அள்ளி அவர் தன் வண்டியில் வைத்தபோது ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறி கீழே தரையில் விழுந்து. அவை ‘நாங்கள் இனி உனக்கு தேவையில்லையா’ என்பதுபோல என்னை பரிதாபமாக பார்த்தன. முன்பு புதிதாக அவை வந்தபோது என் கைகளில் தவழ்ந்திருந்தன. பின் சில ஆண்டுகள் என் வீட்டில் என்னுடனே வாழ்ந்தன. தற்போது அவற்றிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பேப்பர் கடைக்காரர் கொடுத்தது சில ரூபாய் நோட்டுகள்தான் என்றாலும் அவை என் சட்டைப்பையில் கனமாகத்தான் இருந்தது.தனிப்பட்ட ஒரு புத்தகம் தன் வாழ்நாளில் ஒரு வாசகனை கண்டடைந்தாலும் அது மற்றொரு வாசகனின் கைகளுக்கு சென்றடைவது அரிதாகத்தான் உள்ளது….. அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்.