
மின்வெட்டு நேரத்தில்
மொட்டைமாடிக்கு
அழைத்துச்செல்வாள் அம்மா…
அவள் அருகில்
படுப்பதற்குத் தான்…
எங்களுக்குள்
போட்டாப் போட்டி நிகழும்…
ஒருமாதிரி சாமதானம் செய்து
நடுவில் படுத்துக்கொள்வாள்…
அடுத்து ஆரம்பிக்கும்
ஒருசண்டை .
கதைசொல்லும் வேளையில்
அவள் நிலவுமுகத்தை
எந்த பக்கம் முதலில்
திருப்புவாள் என்றே…
மாறி மாறி
கழுத்தைத் திருப்பி
அலுக்காமல் கதை சொல்லிக்கொண்டிருந்தவள்…
என்ன நினைத்தாலோ
தெரியவில்லை
நிலவைப் பார்த்தும் சொல்ல
ஆரம்பித்துவிட்டால்…
அதுவும் எங்களோடு
சேர்ந்து ‘உச்’ கொட்ட
ஆரம்பித்தது….
அம்மாவை சூழ்ந்துகொண்டு
கதை கேட்ட ஞாபகத்தூளியை
ஒவ்வொரு இரவிலும் ஆட்டிவிடுகிறது
இந்த நிலவு.
