
“அவனும் நம்ம சாதிக்காரன் தாம்ல. கோவில் விசேஷமின்னு கெஞ்சறேன். ஆனாலும் கூட அனுமதி தரமாட்டானோ?” என்று ஆத்திரமாக வினவினான் மணி.
“அந்தாள பத்தி தான் தெரியும்ல. சாமியாவது, பூதமாவதுண்ணு திரிவான். சரியான இம்சை புடிச்சவன். விடுங்க பங்காளி” எனச் சமாதானம் செய்தான் செந்தில்.
“அவனுக்கும் அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே சென்றான் மணி.
இருவரும் சென்றதும், பெருமூச்சு விட்டு, சற்றே ஆயாசமாக இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ” ஊரெல்லாம் கொரானா கோர தாண்டவம் ஆடுது. இதுல திருவிழான்னு கூட்டம் சேர்த்து இன்னும் பத்து பேர்த்துக்கு பரப்புவானுக. ஆண்டவனே! இந்த கொரானா முடியற வரைக்கும் என்னை நாத்திகனாவே இருக்கவிடு!” என்று கண்ணில் நீர் மல்க மானசீகமாக வேண்டிக் கொண்டான்.
