G S மணிமுத்து
* நீண்ட நாட்களாக எனக்குள்
என்னை குடைந்து கொண்டிருந்த
நான் யார் எனும் கேள்விக்கு
பால்ய நண்பண் ராமகிருஷ்ணனின்
மரணநாளன்றே விடை கிடைத்தது!
*ராமகிருஷ்ணன் சித்தப்பா
இவன் தவமாய் தவமிருந்து
பெற்ற பிள்ளை குழந்தையில்
கொள்ளை அழகன் என்றார்!
*சித்தியோ தத்தி நடக்கையில்
இவன் கோகுலத்து கிருஷ்ணன்
அதனால்தான் இவனுக்கு
கிருஷ்ணன் பெயர் என்று
கதறி அழுதார்!
* விடலைப் பருவத்தில்
இவன் பெரிய புத்திசாலி
என்பதை நானும்
நினைவு கூர்ந்தேன்!
*அப்போது அங்கு வந்த
சக தோழன் ஒருவர்
இவன் வாலிபத்தில்
காண்போர் மயங்கும்
பேரழகன் என்று புலம்பினார்!
* ராமகிருஷ்ணன்
புனிதர் ,மனிதாபிமானன்,
நல்லவர், அன்பானவர் எனும்
பல சொற்கள் மலர்மாலைகளினூடே
விழுந்து கொண்டிருந்தது!
*அப்போது இடுகாட்டில்
குழிதோண்டி புதைக்கக்
காத்திருந்தவன் விருட்டென
வந்து சற்றும் சலனமின்றி
சொன்னான்
மிகவும் நாழியாகிவிட்டது
இந்த சவத்தை எப்போது
எடுப்பீர்கள் என்று !
* நான் யார் என்பதையும்
அன்று உணர்ந்தேன்!
