“நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி” : நோயல் ஜோசப் இருதயராஜின் பின்நவீனத்துவ வெளிப்பாடுகள்!

முத்துக்குமார்

[என்னுடைய இந்தக் கட்டுரை நவீன விருட்சம் சிற்றிதழில் சமீபத்தில் வெளிவந்தது.

மேற்கத்திய கோட்பாடுகளை உள்வாங்குதல் என்பதை எதிர்கொள்வதில் பழமைவாதிகள் எந்த புதுச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும், இவை பிரேரணை செய்யும் புதிய மதிப்பீடுகளையும், சிந்தனை-செயல் அல்லது செயல்-சிந்தனை சட்டகமாற்றங்களையும் சிறிதும் சுய-ஐயுறவு கொள்ளாமல் முன்விலக்கவே செய்வர்.

பிறிதொரு வகையினர், பிறநாட்டுச் சிந்தனைகள், படைப்புகள் தமிழ் மொழிக்கு ‘வளம்’ சேர்க்கும் ‘நல் நோக்கத்துடன்’ வரவேற்கப்பட வேண்டும் என்ற கொள்கையில், தமிழ் மொழியின் நலம் சிறப்பிக்கப் படவேண்டும் என்ற விரும்புவதான பெயரில் ‘மொழிபெயர்ப்பு’ ‘அறிமுகம்’ ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்யும் போது நமக்கு அன்னியமான கோட்பாடுகளை, சிந்தனைகளை, கருத்து, மொழி, நடை வகைமைகளை சுவைத்து, உய்வித்துச் செய்வதில்லை. இத்தகையோரின் அறிமுகங்களின் ஆறுமுகங்களை நாம் இவ்வாறாகத் தொகுத்துக் கொள்ளலாம்:

  1. தகவமைத்தல்
  2. குறுக்கல் செய்தல்
  3. ஒடுக்கல்
  4. கொச்சைப்படுத்தல்
  5. அரசியல் உள்நோக்கங்களுடன் பிரபலமாக்கல் அல்லது வெகுஜனமயமாக்கல்
  6. திரித்தல்.

மேற்கத்திய கோட்பாடுகளை, விமர்சனங்களை, மொழிநடையை, நயங்களை உள்வாங்குதலில் இந்த இரண்டாம் வகையினர்தான் நோயல் ஜோசப் இருதயராஜின் பிரதான விமர்சன-எள்ளல், எள்ளல்-விமர்சன இலக்கு என்று இந்த நூலை வாசிக்கும் போது ஏற்படும் எண்ணம் தவிர்க்க முடியாததே.

நவீனத்துவம், தகர்ப்பு விமர்சனம், அமைப்புமைய வாதம், பின் அமைப்புவாதம், பின் நவீன இயம் இவற்றுக்கிடையேயான பேத/அபேதங்களை, கூடல்/பிரிதல்களை கற்பு/களவுகளை அரிய கறார் நோக்கில் முறிப்பு/தொடர்ச்சி என்ற முரண் இயங்கியல் மாதிரியில் விசாரணை மேற்கொள்ளும் நோயல், மரபுவழி மறுப்பு-மரபு மறுப்பு என்ற வழக்கத்திற்கு மாறான பாணியில் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.. அதுவும் குறிப்பாக “முன்னுரை எனப்படும் பின்னோக்கு” என்று தன் முன்னுரைக்கு தலைப்பிடும் போதே அவரது முரண் தொடர் சொல்லாடல் கட்டமைப்பு தெற்றென புலப்படுகிறது. இத்தகைய சொல்லாடல் கட்டமைப்பு தனது கட்டுரை நெடுகிலும் பல்கி, விரவிக் கிடப்பதை உணர்த்ததானோ என்னவோ, “கோட்பாட்டு விமர்சன யுகம் விமர்சனக் கோட்பாட்டு யுகம் என்று தலைப்பிட்டுள்ளாரோ?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறைத் தலைவராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நோயல் ஜோசப் இருதயராஜ், ஆங்கிலக் கல்விப்புலத்தின் அனைத்து அனுகூலங்களை, உக்கிரத் தமிழ் வாசிப்பில் திளைத்து லீலாவினோத, ‘கவர்ச்சிகரக் கறார்’(காண்க பக்.85) நடையில், அதாவது கற்பனை வளமும், கருத்துகளில் தெளிவும் துல்லியமும் நயமும் பட இலக்கிய நடையில் பின்நவீனத்துவங்களை எழுதுகிறார்.

பின்நவீன இயம் குறித்து பின்நவீன பாணியிலேயே எழுதப்பட்டிருக்கும் முதல் கட்டுரைத் தொகுப்பு இது என்று கூறினால் அது மிகையான கூற்றல்ல.

1989-ஆம் ஆண்டு ‘இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கு’என்ற கட்டுரை ‘மேலும்’ ஆய்விதழில் வெளிவந்த தருணம் பின் அமைப்புவாத, பின் நவீன இயத்தின் வருகையை அறிவித்தது.

அப்போது முதல் இன்று வரை எழுதப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பு அடையாளம் பதிப்பகத்தினாரினால் புத்தகவடிவம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த தொகுப்பில் கட்டுரைகள் அது வெளியான/எழுதப்பட்ட காலவரிசை அடிப்படையில் அமையவில்லை. முதல் கட்டுரை “இலக்கியத் தத்துவம், தத்துவ இலக்கியம்: சார்த்ருவின் ஈரிழை” என்பதாகும். அதாவது அமைப்பு மையவாதம் பிரதானமாக எதிர்த்த தனிமனித வாதத்தின் தீவிர, ஜீவஜோதி வடிவங்களைக் கொண்ட சார்த்ரு பற்றிய கட்டுரை முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.

முதலில் வெளியான இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கு நடுவிலும், கடைசியாக “முழுமைவாதங்களின் நெருக்கடியும், விமர்சனத் தத்துவத்தில் தீர்வு சாத்தியமும்” என்ற காண்டின் விமர்சன தத்துவச் சிந்தனையின் சகல பரிமாணங்களையும் அலசும் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

இது கருதிச் செய்த வரிசை முறை என்று தெரிகிறது. அதாவது எக்சிஸ்டென்ஷலிசத்தில் தொடங்கி அமைப்பு மையவாத விவரிப்பு, அதன் உடன்நிகழ்வாக தமிழ் ‘அமைப்பியல்’ பற்றிய கறாரும், நையாண்டியும், அசதியாடலும், பகடியும் கலந்த விமர்சனம், பிறகு பின்நவீன இயங்கள்-நவீனத்துவங்கள் பற்றிய விவரணைகள் பரிமாணங்கள், விமர்சனங்கள் என்று எதிர்-மையம் கொண்டு கடைசியில் காண்ட்டின் ‘நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி’ என்று இந்த நூல் முடிகிறது. இடையே குறியியல் பற்றிய இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவையெல்லாம், மேலும், சதுக்க பூதம், நிகழ், பன்முகம், புலமை, இந்தியா டுடே மலர் (கோவை ஞானியின் நூலுக்கு எழுதிய மறுப்பு மதிப்புரை) உள்ளிட்ட இதழ்களில் வெளியானவை. “மேலை நோக்குகளில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்” என்ற கட்டுரை இந்த நூலில்தான் முதன் முதலில் வெளியாகிறது.

அவரது எழுத்துகளின் வரிசை முறைப்படி அணுகினால் இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கு என்ற கட்டுரையில் அவர் இயக்கம் அல்லது அமைப்பு, கட்டமைப்பு என்பதன் மீதான விமர்சனமாக ‘ஆட்டம்’ என்ற பின் நவீன இயத்தின் பிரதானத்தை முன் வைத்துள்ளார். அதாவது “போஸ்ட் மாடர்னிசத்தின் பிரதான சித்தாந்தம் லீலாதத்துவமே; அதன் பிரதானக் கருத்துணர்வுத் திரள் நகைச்சுவையே” (பக். 133) என்று கூறுவதில் தொடங்குகிறார்.

ஆட்டத்திலிருந்து இயக்கத்திற்கு:

பிறிதொரு கட்டுரையில் தெரிதாவை அடியொட்டி, “முறையே அடக்கு முறை” என்கிறார். இவ்வாறு முழுமையியம், முழுமையாக்கல், மொத்தத்துவம், ஏகத்துவம், சுய ஏக நிச்சயவாதம் ஆகியவற்றிற்கு மாறாக, மாற்றாக பின் நவீன இயத்தின் ஆட்டம், நகைச்சுவை, அசதியாடல், பகடி ஆகியவற்றை பிரேரிக்கிறார். நூலின் கடைசி கட்டுரையான ‘முழுமைவாதங்களின் நெருக்கடியும்…’என்பதில் ‘இலதாக்கல்’, ‘நிர்ணயமின்மை’ என்ற தத்துவ நிலைப்பாட்டுக்கு பெயர்வுகொள்ளும் போது, முழுமைவாதங்கள், முழுமையாக்கங்களுக்கு எதிரான விமர்சனச் செயல்பாட்டை காண்டிய/பிராங்பர்ட் மார்க்சிய/ தகர்ப்பு விமர்சன சொல்லாடல்களில் கறாராக அடித்து நொறுக்கி நவீனத்துவத்தின் அடிப்படையான ‘நிரந்தர விமர்சனம்’ அல்லது டிராட்ஸ்கிய மார்க்சிய பாணியில் கூற வேண்டுமெனில், ’நிரந்தரப் புரட்சி’என்பதாக விமர்சன ‘இயக்கத்தை’யும் அதன் இன்றியமையாத்தன்மையையும், அதன் சாத்தியங்களையும் விவரிக்கிறார்.

ஒரு விதத்தில் ’இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கு’ என்று தொடங்கும் நோயல் ஜோசப் இருதயராஜின் எழுத்தியக்கம் நூலின் கடைசிக் கட்டுரையில் மீண்டும் நிரந்தர விமர்சன இயக்கமாக நிறைவுறா நிறைவு கண்டுள்ளது. இந்த விமர்சன இயக்கம், முழுமைவாதங்களைக் கட்டமைக்கும் இயக்கம் அல்ல. முழுமைவாத மறுப்பு விமர்சன இயக்கம். எது எப்படியிருந்தாலும் இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கும், மீண்டும் ஆட்டத்திலிருந்து இயக்கத்திற்கும் இடையறாது அலைவுறும், ‘கோட்பாட்டுப் பித்தத்திற்கும் போஸ்ட்-ஸ்ட்ரக்சரலிசம் கொண்டாடும் ஆளுமைச் சிதறலுக்கும் இடையே தொங்கும் முறுக்குக் கயிற்றில் நடக்கும் நடையே’(பக்.18) என்ற அனவஸ்தையே சிந்தனை/எழுத்து/படைப்பு இயக்கங்களின் இன்றியமையா நியதி என்பதை இந்த நூலை வாசித்த பிறகு உணர முடிகிறது.

ஆனால் நித்திரையையும், நித்யத்துவத்தையும் (Permanance) தொலைத்து, விமர்சனத்தையும் தொலைத்து வெற்றுக் கடமை நித்யத்தில் (everyday) தேய்ந்து, நலிவுறும் வெறும் வாயிலோனாக, காவலாளியாக, பிரான்ஸ் காஃப்காவின் விசாரணை நாவலில் ‘சட்டத்திற்கு முன்’ என்ற உருவகக்கதையில் வரும் வாயிலோனாக (door keeper) முடிந்து விடக்கூடிய சாத்தியத்தின் விழிப்புணர்வையும் கோருகிறதா நோயலின் கான்ட்டிய ’நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி’என்பதைக் கேள்வியாக முன்வைக்க வேண்டியுள்ளது.

வடிவ இயல் அம்சங்களில் சில:

மொழிநடை: புதிய சொல் ஆக்கங்கள்- மேற்கத்திய தத்துவ-கோட்பாட்டுக் கருத்துகளுக்கான தமிழ் இணையை கொடுக்கும் போது சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதிலும், பழைய தமிழ் சொற்களின் தத்துவ உட்கிடைக்கைகளின் சாத்தியங்களை நவீனப்படுத்துதலிலும் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சொற்கள் என்பது வெள்ளைக்காகிதத்தில் அச்சேற்றப்படும் உயிரில்லா எழுத்துக்கள் அல்ல. சொற்கள் என்பது மொழிபிரபஞ்சம், ‘மொழியே தத்துவம்-தத்துவமே மொழி’ என்பதை இந்நூல் நினைவில் நிறுத்துவதுடன் அதன் மொழிநடையில் நடித்துக் காட்டவும் செய்கிறது.

இதற்குப் பிரதானமாக அமைவது மொழிவரலாற்றியல் சார்ந்த வேர்ச்சொல் ஆய்வு, பன்மொழி நடை/நாட்டியம், வடமொழி துவேஷமின்மை, தமிழ் மொழியை தத்துவச் சொல்லாடல் மயப்படுத்தும் முயற்சி ஆகியவை இந்த நூலின் நடை விசேஷங்களுள் குறிப்பிடத்தகுந்தவை.

இந்த வகையில் தமிழ் விமர்சன மொழி வரலாற்றில் புதிய பாதைகளை திறக்கச் செய்வதும், வகையினங்கள் கடந்த மொழிநடையினால் புதிய விமர்சன மொழிநடைச் சாத்தியங்களையும் உருவாக்கும் கூறுகள், கணங்கள் இந்த நூலிற்கு உண்டு.

உள்ளடக்கப் பிரதானங்களில் சில:

  1. அமைப்புமையவாத, பின் அமைப்பு வாத, நவீனத்துவ/பின் நவீன இயங்களின் பிரதானங்களையும், பிரதானங்கள் கடந்த நுணுக்கங்களையும் நுட்பங்களையும் துல்லியமாக, தெளிவாக (நடையில், விவரிப்பில் உள்ள கடினப்பாட்டை தெளிவின்மையாக குழப்பிக் கொள்ளக் கூடாது, மாறாக ‘புரிதல்’ என்ற முன்புரிதலின் அடிப்படையில் மேலோட்டமான அறிமுகங்கள் சாதிப்பதெல்லாம் தெளிவின்மையே என்பதை நாம் நினைவில் நிறுத்துவது உசிதம்) எடுதுரைக்கிறது.
  2. நவீனத்துவங்களை கோட்பாட்டு முறையில் அணுகும் ஒரு 6 நிலைப்பாடுகளை விவரித்தல். நவீனத்த்துவங்களுக்கும் பின்நவீன இயங்களுக்கும் இடையிலான தொடர்ச்சி/முறிப்பு, விட்டு நீங்கா இடையறாத்தன்மை அதன் சிக்கல்கள், தத்துவ இக்கட்டுகள் ஆகியவை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளன.
  3. விமர்சனம் என்பதனை அறிவுத்துறைகளின் செயல்பாட்டுச் சாத்தியங்களுடன் விவரித்து அந்த துறைகளும், தமிழ் மரபும் கண்டிராத புதிய தகர்ப்பு விமர்சன விளக்கங்களை நுண்மையாக விவரிக்கப்பட்டுள்ளன.
  4. குறியியல், கம்யூனிகேஷன் ஆகியவை பற்றிய ஒரு விஸ்தாரமான அறிமுகம் இந்த நூலின் பிரதான இலக்கினுள் அடங்காத கூடுதல் விசேடம்.
  5. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் கோட்பாடுகளை மேலைநோக்குகளில் விமர்சனப்படுத்தும் எதிர்கால விமர்சன முன்னெடுப்புக்கான விமர்சன முன்னோட்டம் இந்த நூலின் மிக முக்கியமான கட்டுரை. இது போன்ற கட்டுரைகள், நோயல் ஜோசப் இருதயராஜ் எழுத்துக்கள் மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரிப்பதாக உள்ளன.

விமர்சனங்கள், விமர்சனப்பள்ளிகள், விமர்சன இயக்கங்கள் ஆகிவற்றைப்பற்றி இந்த நூலில் முக்கியமான, பிரதானமான, அடிநாதமான அம்சங்கள் இருந்தாலும், கோட்பாடு என்பதன் பல்படித்தான, ஏகத்துவப் பித்தத்திற்குக் குறுக்க முடியாத விஸ்தீரணங்கள் பற்றி ஒரு முழுமையான கட்டுரை இந்த நூலில் இல்லை என்பது சற்றுக் குறைபாடாகத் தெரிந்தாலும், அது போன்ற ஒன்றை இவரிடம் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

One Comment on ““நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி” : நோயல் ஜோசப் இருதயராஜின் பின்நவீனத்துவ வெளிப்பாடுகள்!”

  1. நவீனத்துவம் பின்நவீனத்துவம் அமைப்புவாதம் தனிநபர் முன் நிறுத்துதல் போன்ற கருத்துக்களின் புரிதல்கள் ஒரு வரையறைக்குள் அடங்காமல் சற்று மேலெழும்பி அடுத்த கரையையும் தொடும் அந்த சிக்கலில்லாமல் மிக இயல்பாக இக் கட்டுரை வந்துள்ளது

Comments are closed.