சூரிய உதயம்/ நாகேந்திர பாரதி

பனைமரத் திடையே பகலவன் தோன்ற
பார்த்த நிலவுப் பெண்பயம் கொள்ள

தனிமை கண்டு தவித்த அப்பெண்
தவழ்ந்திடும் மேகம் தாயென மறைய

தினைகதிர் கொய்ய நின்றிடும் மறவர்
தினவுதோள் பொங்கி ஆர்த்திடும் வேளை

சுனையிடைத் திகழும் சுந்தரக் கொக்கொடு
சுருதியைச் சேர்க்கும் புள்ளினம் ஒருபால்

கணைதொடு கயல்விழி மாதரும் கூடி
வளைகரம் ஒலிக்க வாவியில் ஆடி

இணையிலாப் பொருளை மனதிலே ஏற்றி
எழுகதிர் கண்டு போற்றினர் பாராய்


பின்குறிப்பு:
———————
பத்தாவது படிக்கும் போது எழுதிய முதல் கவிதை.
நிலைமண்டில ஆசிரியப்பா என்று நினைத்து எழுதியது.
ஈரசைச் சீர் எல்லாம் சரியாக இருந்தாலும்
இறுதிச் சீரும் ‘ஆய் ‘ என முடிந்தாலும்
ஒன்ற வேண்டிய ஆசிரியத் தளை ஒன்றாமல் போய் விட்டது
தெரிகிறது இப்போது.
தளை தட்டுகிறது
தலையில் குட்டுகிறது