தமிழணங்கே!/கு.மா.பா.திருநாவுக்கரசு

வித்தாரத் தமிழணங்கே! – நின்
வியத்தகுச் சொல்லழகை,
முத்தாகும் பொருளழகை…
மூத்த நின் மொழியழகை…
எத்துணைப் பிறப்பெடுத்தும்
எம் நாவில் துய்க்க வேண்டும்! -நான்
செத்தாலும் நின் கருவில் – மீண்டும்
சேயாகப் பிறக்க வேண்டும்!
– (வித்தாரத்…)

செம்மொழிகள் சிலவுண்டு இவ்வுலகில்
செறிவுடைய நின் மொழிக்கு நிகரெதும் உண்டோ?
அண்ணத்தில் ஒட்டாமல் உயிர் எழுத்தை
அதரங்கள் உச்சரிக்கும் அழகிய லுண்டோ?
இனத்திற்கு ஆறாக மெய் யெழுத்தை
இனிமையுடன் உயிர்மெய்யாய்
பகுத்தவருண்டோ?
அ’ஃ’என்னும் சிறப்பொலியும்
‘ழ’கரத்தின் தனியொலியும்
அகிலத்தில் தமிழ்க்கன்றி பிறமொழிக் குண்டோ?
– (வித்தாரத்…)

ஈரடியில் எழுசீரில் திருக்குறள் கண்டு
இலக்கணமாய் உலகமறை ஓதுகின்றாய்!
ஏடுகளில் முதல்நூல்கள் காப்பியங்கள்
இன்தமிழில் வழிநூல்கள் கூறுகின்றாய்!
பாரெங்கும் நின்புலமைத் தமிழொலிக்க
பல்கலையின் இருக்கைகளில் வீற்றுள்ளாய்!
ஆரணங்கே! பல்லாயிரம் ஆண்டு முன் நீ
அவதரித்தும் அழியாமல் ஆளுகின்றாய்!
– (வித்தாரத்…)
தோடுடைய சிவன்கண்ட மொழி யென்று
தொல்காப்பிய ரகத்தியரும் பாடியுள்ளார்!
பாட்டுடைய தமிழ்க்கடவுள் முருகைப் போற்றும்
பைந்தமிழின் தொன்மைதனை யாரறிவார்?
காடு மலை தாண்டிவந்தும் உயிர்க்காற்றாய்
கன்னித்தமிழ் இளந்தென்றல் வீசுகின்றாள்!
நாடு பல கண்டுய்யும் தமிழணங்கே!
நற்றமிழில் நர்த்தனம் நீ ஆடுகின்றாய்!
– (வித்தாரத்…)


  • நாள்: 23/4/2022