‘சொந்தம்’/ஆர்.கந்தசாமி

சிவகாமிக்கு வயது அறுபது. கணவர் சங்கர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஒரே மகன் அருண் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறான். சிவகாமியின் தாயும் தந்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவளது அண்ணன் சிவகாமியைப் பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டான்.

“என்னங்க யாருடன் போனில் பேசினீர்கள்?”

“நம்ம அருண்தான் கூப்பிட்டிருந்தான். சொந்தமாக வீடு வாங்க கொஞ்சம் பணம் பற்றாக் குறையாம். உதவ முடியுமா என்று கேட்டான். சரி என்றேன்” என்றார் சங்கர்.

“என்னிடம் கொடுத்திருந்தால் நானும் பேசியிருப்பேனே” என்றாள் சிவகாமி.

“அம்மாவிடம் பேசுகிறாயா? என்று கேட்டேன். முக்கிய வேலை இருப்பதால் நாளைக்குப் பேசுகிறேன்” என்றான்.

பெருமூச்சு விட்டாள் சிவகாமி. இதுபோல் எத்தனை முறை கேட்டிருப்பாள் அவள். அப்பாவிடம் மட்டும் பேசி பென்சன், வங்கி இருப்பு போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்வான். அவனுடைய சம்பளம், சேமிப்பு போன்ற விஷயங்களை அவன் அம்மா சிவகாமியிடமோ, அப்பா சங்கரிடமோ சொன்னதேயில்லை.

“சிவகாமி அடுத்த வாரம் அருண் வீட்டிற்குப் போகலாமா?” என்றார் சங்கர்.

“எதற்கு?” என்றாள் சிவகாமி.

“அவன் வாங்கும் வீட்டைப் பார்க்க அழைக்கிறான்” என்றார் சங்கர்.

“தன்னிடம் தனியாக வங்கியில் பணம் இருந்தால் தன்னிடமும் மகன் பேசியிருப்பானோ?
என்று சிவகாமி நினைத்தாள். பாசத்தைக் கொட்டி வளர்த்ததையெல்லாம் மறந்து விட்டான். பணமே பெரிதாக நினைக்கிறான். கடைசி வரை பணம் யார் கொடுக்கிறார்களோ அந்த அம்மாவிடம் மட்டும் பிள்ளைகள் பேசுமா?” என்று சிவகாமி தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“சரி நான் வரவில்லை. நீங்கள் சென்று பார்த்து விட்டு வாருங்கள்” என்றாள் சிவகாமி.

“ஒரு மாற்றத்திற்கு அங்கு ஒருவாரம் இருக்கலாமே?”
என்றார் சங்கர்.

சிவகாமி செல்லும் போதெல்லாம் மருமகள் சித்ரா உடல்நிலை சரியில்லை என்று சொல்லி படுத்துக் கொள்வாள். மகன் அருணும் “அம்மா! சித்ரா உடம்புக்கு முடியாமல் இருக்கிறாள். நீ கொஞ்சம் வீட்டைக் கவனித்துக் கொள்” என்று சொல்லி விட்டு வேலைக்குச் சென்று விடுவான். சிவகாமி இருக்கும் வரையில் மகன் வீட்டில் எல்லா வேலைகளையும் அவளே செய்வாள். வெறுத்துப் போன அவள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மகன் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்தாள்.
“ஏன் என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை?”
என்று அவள் பலமுறை நினைத்து வருந்தியது உண்டு.

சங்கர் காலையில் நடைபயிற்சி, பேப்பர் வாசிப்பு, பின்னர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்க போய் விடுவார். மாலையில் இருந்து இரவு சாப்பிடும் வரையிலும் அப்பா, அம்மா, சகோதரி, நண்பர்கள் என்று கைபேசியில பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் அவர்கள் யாருமே இவளுடன் பேசுவதில்லை.
சிவகாமியின் அம்மா, அப்பா இருந்த வரையில் அவர்களும், அவளது அண்ணனும் தினமும் பேசுவார்கள். அப்பா, அம்மா உடல்நிலை சரியில்லாத போது இருவரையும் இறக்கும் வரையில் கூட இருந்து பார்த்துக் கொண்டாள் சிவகாமி. அவர்கள் இறந்ததும் சொத்து சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் கையெழுத்து வாங்கிக் கொண்ட அண்ணன் பின்னர் தன்னுடைய போக்கையே மாற்றிக் கொண்டான்.

சங்கர் எப்போதும் சிவகாமியின் மனநிலையைப் புரிந்து கொண்டதில்லை. அவளுக்குத் துணை புத்தகங்கள் மட்டுமே. “அவைகளை எதற்காக பணத்தைச் செலவழித்து வாங்க வேண்டும்? அவற்றையெல்லாம் படித்து ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று கேட்கும் போதெல்லாம் சங்கரின் தோளில் சாய்ந்து தனது தனிமையின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவகாமி நினைப்பாள். ஆனால் இத்தனை ஆண்டுகள் உடன் வாழ்ந்து
தன்னை இன்னும் புரிந்து கொள்ளாத கணவரிடம் தானாக வலிய ஏன் சொல்ல வேண்டும் என்று நினைத்து எதையும் சொல்லாமல் விட்டு விடுவாள் சிவகாமி.

உடல் தேவைப்படும் போது வந்து அடிக்கடி தன்னை அணைத்துக் கொண்ட கணவன், தன் உடல் இனி தனக்குச் சுகத்தைத் தராது என்று நினைத்தவுடன் தொட்டுப் பேசுவதையே நிறுத்தியது ஏன்? எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களா? தூக்கி வளர்த்த மகன் ஊரில் இருந்து வந்தவுடன் ஓடிவந்து ‘அம்மா!’ என்று அணைத்துக் கொள்வதெல்லாம் திரைப்படங்களிலும் கதைகளிலும் மட்டும் தானா? அப்பா, அம்மா சொத்துக்களையெல்லாம்
தனது பெயரில் மாற்றிக் கொண்ட எல்லா சகோதரர்களும் தனது அண்ணனைப் போலத் தான் நடந்து கொள்வார்களா? தனது மனைவிக்கு தனது தாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்றுதான் எல்லா பிள்ளைகளும் நினைப்பார்களா?

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்த சிவகாமிக்குத் தான் ஏனோ தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. என்மேல் அக்கறை கொண்ட, எனது மனதைப் புரிந்து கொண்ட சொந்தங்களே இல்லையா? நான் இந்த மண்ணில் உயிர்வாழும் வரையில் இப்படியேதான் இருக்கனுமா? என்று நினைத்தாள்.

“ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்”
பழைய திரைப்படப் பாடல் ஒன்று காற்றில் கலந்து வந்து சிவகாமியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.