
சங்கர் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று கருமமே கண்ணாயிருப்பவன். நான்கு பிள்ளைகளைப் பெற்ற அம்மா ‘குளித்தவுடன் விபூதி வைத்துக்கொள், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியில் கிளம்பு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். கோவிலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டான். ஒரு நாள் அதிசயமாகப் கோவிலுக்கு சென்ற அவனது செருப்பு தொலைந்து விட ‘பார் அதற்குத் தான் நான் கோவிலுக்கே வர மாட்டேன் என்றேன்’ என்று தன் நியாயத்தை மேலும் உறுதிப்படுத்தினான்.
ஒரு நாள் வேலையிலிருந்து வந்த சங்கர் அசாதாரணமாக படுத்திருந்த அம்மாவைப் பார்த்து பதறி உடனே டாக்ஸி ஏற்பாடு பண்ணின ஆஸ்பத்திரிக்குப் கூட்டிப் போனான். டாக்டர் வந்து பார்ப்பதற்குள் தன்னை அறியாமலேயே ‘ஆண்டவா, எங்க அம்மாவை எப்படியாவது காப்பாற்றி விடு. நான் கோவிலுக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்’ என்று வேண்டிக் கொண்டான். ஆனாலும் அம்மா மீளவில்லை. அந்த வருத்தத்தில் ‘ஆண்டவனே! என்னை நாத்திகனாகவே இருக்க விடு’ என்று கண்ணில் நீர் மல்க வேண்டிக் கொண்டான்.
