
இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை ஐ தவிர்க்கவே முடியாது. பாம்பே பாலியியல் தொழிலாளிகள் வாழும் சிவப்பு விளக்கு பகுதியான காமத்திப்புராவில் பிறந்து வளர்ந்தவர். பாலியியல் தொழிலாளிகள், ஓரின சேர்க்கையாளர்கள், தரகர்கள், குடிகாரர்கள், போக்கிரிகள், ரவுடிகள், திருநங்கைகள், கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள், பிச்சைக்காரர்கள் மத்தியில் அவர்களுடன் வாழ்ந்து வளர்ந்தவர்.
தன்னுடைய 24 வயதில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு மராட்டிய இலக்கிய உலகை திகைக்க வைத்தார். அந்த தொகுப்பின் தலைப்பு ‘கோல்பித்தா’. வட்டவடிவ சாராயக் கடை என்ற பொருளில் மராட்டிய மொழியில் தலைப்பிட்டார். இந்த தொகுப்பு வெளியான சில மாதங்களில் ‘தலித் சிறுத்தைகள்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். சில காலம் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார். பல கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும் முதன்மையாக அவர் கவிஞர். தன் வாழ்நாளில் ஓன்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை எழுதி வெளியிட்டார். ஒவ்வொரு தொகுப்பும் தனித்துவமானவை. இந்திய கவிதை மரபுக்கு எதிராக தசல் தன் கவிதையில் மொழியையும், உள்ளடக்கத்தையும் மாற்றி வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
காமத்திப்புராவில் புழங்கும் நடைமுறை மொழியை தன் கவிதையில் பயின்றார். இந்தி, மராத்தி, உருது கலந்த மொழி ‘பாம்பையா’ என அழைக்கப்படுகிறது. இந்த மொழியை கவிதையில் கொண்டுவந்தார். அதனால்தான் இவருடைய படைப்புகள் ஆங்கில மொழியாக்கம் மிகக் கடினமானது. இருந்தபோதிலும் திலிப் சித்ரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தசலின் மேதமையை உலகுக்கு புரியவைத்தார். மேற்கத்திய இலக்கியத்தில் இதே போல் இருண்ட உலகத்தில் வாழ்ந்து அபாரமான இலக்கியங்களை படைத்த ஜெனே போல், இந்தியாவில் தசல் எழுதிய படைப்புகள் பிரமிக்க வைக்கும். தேங்கி நிற்கும் சாக்கடை நீர், மூழ்கி பலியாகும் முதியவர், பாலியியல் நோய், பாலியியல் தொழிலாளிகளின் படுக்கையறை உத்திகள், ஓரின சேர்க்கையாளர்களின் உடல் வேட்கை, வேட்டையாடப்படும் திருநங்கைகளின் உடல் உறுப்புகள், இரண்டாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்ட உடல்கள், பக்தி இலக்கியம், சமஸ்கிருதத்தின் மேட்டிமைத்தனம், கருப்பு நிறத்தின் மேல் உள்ள ஒவ்வாமை, பாலிவுட் திரைப்படங்களில் காமத்திப்புராப்பற்றிய எதிர்மறை சித்தரிப்பு, இந்திய அரசியலில் ஏமாற்றப்பட்ட தலித்துகள், இந்து மதத்தில் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் என கலவையாக கொலாஜ் பாணியில் ‘பாம்பையா’ மொழியில் எழுதி அலற வைத்தார்.
தலித் இலக்கியத்தில் மராட்டிய மொழியின் மரபை இவரைப்போல் உடைத்தவர் எவரும் இல்லை. மற்றொரு கவிதை தொகுப்புக்கு ‘ காண்டு பகிச்சா’ என தலைப்பிட்டு அதிர வைத்தார். Ass Fuckers Park என்ற பொருளில் இதற்கு தலைப்பிட்டார். மரபான வாசிக்கும் வாசகனுக்கு அவருடைய கவிதைகள் புரியாது மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல் ” இரண்டாயிரம் வருடங்களாக சீழ் படிந்த மொழி, கலாச்சாரம், அரசியலால் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம். நான் பயிலும் மொழி சனாதனிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தவேண்டும், உறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுக்கேற்ற மொழியில் எழுதிச் செல்கிறேன்” என்றார். அவர் படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுவந்த அவருடைய சக கவிஞர் திலிப் சித்ரே, தசலின் கவிதை மொழியை Bastard Language என்கிறார்.
(மராட்டிய இலக்கியத்தை பற்றி எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை பகிர்ந்துள்ளேன். இந்திய இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்பது சாதி அடையாளமாக குறுகி பார்க்கப்படுவது துரதிருஷ்டம். இந்திய நவீன இலக்கியத்தில் தலித் மக்களின் பரிசோதனை முயற்சிகள், புதிய உத்திகள் கவனம் பெறவில்லை. தமிழிலும் இதைப்பற்றிய உரையாடல்களை நான் வாசித்திருக்கவில்லை. மராட்டிய தலித் இலக்கியத்தைப் பற்றி ஒரு நூல் எழுதும் அளவுக்கு தரவுகள் உள்ளன. தலித் அரசியலுக்கு வழங்கிய அழுத்தம், அவர்களின் கலை, இலக்கியத்திற்கு வழங்காதது அவலம்)
15You and 14 othersLikeComme
