
தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகங்கள் இனக்குழுச் சமுதாயங்களாக இருக்கின்றன.. இனக்குழு சமுதாயம் என்பதற்கு இப்போது புழக்கத்திலிருக்கிற மலை ஜாதியினர் என்ற பொருள் இல்லை… நாடோடிகளாகவும், கால்நடை வளர்ப்பாளர்களாகவும் இருந்து உழவுத்தொழிலுக்கு அறிமுகமாகி நில உடமையாளர்களாக ஆன பின்னர் அவர்கள் தங்களுக்கென்று ஒரு பண்பாட்டு மரபை உருவாக்கிக் கொள்கிறார்கள்.. வாழ்வியல் மதிப்பீடுகளும் உருவாகின்றன.. பங்காளி, மாமன் – மச்சான், கெடாவெட்டு, சகோதர – சகோதரிப்பாசம் என்ற இந்தக் கட்டுமானங்களுக்கிடையில் சார்புச்சாதிகளோடு இவர்கள் கொண்டிருக்கும் உறவும் (வேற்றுமையும்) இச்சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள்.. வைதீகக் கலாச்சாரத்தோடு இவர்களுக்கு ஒட்டும் இல்லை… உறவும் இல்லை…பண்பாட்டு அம்சங்கள் எல்லாமே வாய்மொழி மரபில் வருபவை… ஐந்திணைப் பாகுப்பாட்டில்- ஐந்து நிலங்களில் வாழ்ந்திருந்த இவர்கள் இப்போது பல சாதிகளாகப் பிரிந்திருந்தாலும் மேற்சொன்ன அம்சங்களின் அடிப்படையில் பார்த்தால் இவர்களுக்கிடையில் பெரிதாக வேற்றுமைகள் இல்லை…ஆனால் காலப்போக்கில் தனித்தனிச் சாதிகளாக உருவாகி விட்டதனால் செயற்கையான வேற்றுமைகள் தெரிகின்றன.. இவர்கள் தங்களுக்குள் மண உறவுகள் வைத்துக்கொள்வதற்கு எந்தப் பண்பாட்டுத் தடையும் இல்லை…ஆனால் அது நடை பெறவில்லை.. இப்போது பெண் கிடைப்பது அரிதாகி வருகிற சூழலில் ‘எந்தச் சாதியா இருந்தாலும் பரவால்லே.. பொளங்கற (புழங்குகிற) சாதியா இருந்தாப் போதும்’ என்கிற வாசகம் கிராமங்களில் அதிகமாகக் கேட்கிறது… அந்த ‘பொளங்கற’ (புழங்குகிற) என்ற பதத்தில் எல்லா மர்மங்களும் அடங்கியிருக்கின்றன… இப்போது ஒருசாதிச் சமுதாயம் தான் செல்வாக்கோடு இருக்கிறது.. மாறாமலிருக்கிறது.. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..
அவைதீக- திராவிடப்பண்பாடு இச்சமுதாயத்தின் பண்பாக இருந்தாலும் அரசியல் திராவிடத்தைக் கண்டும் காணாமலும் இருந்து வந்திருக்கிறது.. அதாவது இப்போது அரசியல் தளத்தில் பேசப்படும் திராவிடத்தை சித்தாந்த ரீதியாக உருவாக்கியவர்கள் யாரும் இந்த இனக்குழுச்சமுதாயங்களில் இருந்து வரவில்லை.. அவர்கள் எல்லோரும் உதிரிச்சாதிகளிலிருந்தும், தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்துமே வந்தார்கள்.. திராவிடக்கட்சிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு சித்தாந்தம் அல்லாத பிற காரணங்களுக்காக திராவிடக்கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.. தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத சூழல் வருகிறபோது எந்தக் கட்சிக்கும் தாவ இவர்கள் தயங்குவதில்லை.. பகுத்தறிவு, சமூக மாற்றம் என்பவற்றில் இவர்கள் பங்களிப்பு மிக மிகக் குறைவு…இது இயற்கையானது தான்.. இழக்காமலிருப்பதற்கு இவர்களிடம் எவ்வளவோ இருக்கிறது..
கல்வி பரவலாக்கப்பட்ட தற்போதைய சூழலில் இவர்களுக்குள்ளே மேலோட்டமாக சில மாற்றங்கள் இருக்கின்றன.. பொருளாதார மேம்பாடு, நகர்மயமாதல் என்னும் இவற்றின் காரணமாக இச்சமுதாயம் இப்போது ஒரு முழுமையான நுகர்வுச் சமுதாயமாக மாறியிருக்கிறது… இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்குள்ளிருந்து மாபெரும் கலைஞர்களோ, சிந்தனையாளர்களோ, சமூகப்பணியாளர்களோ தோன்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை.. இந்த நுகர்வுப்போக்கு சலிக்கும்போது ஒரு வேளை தோன்றக்கூடும்.. இந்த வகையில் வைதீகச் சமூகம் ஆரோக்கியமாகவே இருக்கிறது.. அரசியல், அறிவியல், கல்வி, வணிகம், விளையாட்டு, இலக்கியம், கலை என்பவற்றில் இவர்களது பங்கு ஸ்திரமாகவே இருக்கிறது..
ஒரு இனக்குழுச் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் எனக்குச் சந்தோஷங்களும், சங்கடங்களும் இருக்கின்றன..
