
காப்பு
ஏர்வனைக் காவில்கறை என் ஆனைக்கு அன்று அளித்த
வார் அனைக் கன்றுதனைப் போற்றினால்-வாராத
புத்திவரும் பத்திவரும், புத்திர உற்பத்திவரும்;
சக்தி வரும் சித்திவரும் தான்.
அழகிய திருவானைக்காவில் தங்கியுள்ள என் தாயாகிய பெண் வடிவம் எடுத்த உமையம்மைக்கு. முன்னொரு காலத்தில் குழந்தையாகக் கொடுத்தருளிய போர் புரிவதில் சிறந்த ஆனைமுகத்தையுடைய கடவுளாகிய பிள்ளையாரை வணங்கி வழிபட்டால், முயற்சிகள் எவற்றாலும் வர இயலாத அறிவு உண்டாகும். அன்புண்டாகும் மக்கள் பேறு உண்டாகும். வலிமை கண்டாகும் செயலில் வெற்றி உண்டாகும்.
