படே குலாம் அலிகான்/வாசுதேவன்

படே குலாம் அலிகான் குரலைக்கேட்டால் கடவுளை பார்க்கமுடியும் என்பார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட சாரீரம். பாகிஸ்தானில் பிறந்தாலும் பிரிவினையையும் போது இந்தியாவில் தங்கியவர். காந்தி,நேருவுக்கு நெருக்கமான இந்துஸ்தானி உஸ்தாத். பெங்களூரில் ராமநவமியின் போது அவர் ராம நாமாவளியை பாடுவதை கேட்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். அதில் முக்கியமானவர் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன். அவர் குரலுக்கும் மண்டியிடாத ஆன்மாவே இல்லை. இஸ்லாமிய இந்துஸ்தானி மேதைகள் இந்துமத ஆன்மீக பாடல்களை பாடுவது புதிதல்ல. உஸ்தாத் பிஸ்மில்லா கான் அதிகாலையில் ஷெனாய் இசைத்தவுடந்தான் காசி விஸ்வநாதர் கோவில் நடை திறக்கும். மைசூர் மஹாராஜா நவராத்திரி விழாவில் பல இந்துஸ்தானி மேதைகள் துர்க்கை பாடல்களை பாடியிருக்கிறார்கள். இதெல்லாம் இங்குதான் நடந்தது. படே குலாம் அலிகான் சினிமாவில் பாட மறுத்தவர். மொகைல்‍ ஆசம் படத்தின் இசையமைப்பாளர் நொளஷத் அவரை பாடவைக்க வேண்டும் என வாழ்நாள் விருப்பம். உஸ்தாத் எதற்கும் மசியவில்லை. வேண்டுமென்று ஒரு பாடலுக்கு ரூ.25,000 என உயர்த்திக் கேட்டால் நொளஷத் நகர்ந்துவிடுவார் என நினைத்தார். 1950 களில் ரூ 25,000 என்பது பெரிய தொகை. படத்தின் இயக்குநர்/தயாரிப்பாளர் அஸீஃப் அடுத்த அரைமணியில் பணமுடிப்போடு வந்தவுடன் உஸ்தாத்க்கு மறுக்க முடியவில்லை. அந்தப்படத்தில் பாடிய அந்த ஒரு பாடல்தான் அவர் சினிமாவில் பாடியது. ஹைத்ராபாத் நிஜாமுக்கு நெருக்கமானவர்.இறுதி காலத்தில் ஹைத்ராபாத் நிஜாம் அரண்மனையில் தங்கியிருந்தார். தன்னுடைய 66 வயதில் 1968 ம் வருடம் ஏப்ரல் 23ம் தேதி காலமானார். பழைய ஹைத்ராபாத் ‘மிர் மொமின்’ என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 400 வருட பழமையான புராதானமான இடம். ‘மிர் மொமின்’ என்ற ஈரான் அறிஞர் இந்தியாவுக்கு வந்து பெர்சியா போல் ஒரு நகரத்தை கட்டமைக்க வேண்டும் என விரும்பி ஹைத்ராபாத் ஐ வடிவமைத்தார். பல சுஃபி ஞானிகள், நிஜாம் அரசர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம். (படத்தில் பார்க்கலாம்). முதல் சுட்டியில் அவர் பாடிய சினிமா பாடல்.

One Comment on “படே குலாம் அலிகான்/வாசுதேவன்”

Comments are closed.