காந்தி நூலக விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும்

எஸ்.ஸ்ரீதர் 

கடந்த 10-10-2021 அன்று சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காந்தி நூலகத்தின் 69வது ஆண்டு விழாவும் தேசபிதா மகாத்மா அவர்களின் ஜெயந்தி விழாவும் நடந்தது.


விழாவில், கல்கி இதழாசிரியர் ரமணன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ், எழுத்தாளரும், விருட்சம் இதழாசிரியருமான அழகிய சிங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் காலஞ்சென்ற திரை வசனகர்த்தா அமரர் சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் நினைவாக அவரது பெயரில் விருதுகளும் வழங்கப்பட்டது.


அமரர் சக்தி கிருஷ்ணசாமி பற்றி இன்றைய தலைமுறை அறிவது அவசியம். அன்று சக்தி நாடக சபாவின் ஸ்தாபகர். சுமார் 22 ஆண்டுகள் பல தமிழ்த் திரைக் காவியங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் முக்கியாமானவை. 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், பின் 1965 வெளியான எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை ஆகியவை. இதுதவிர மேலும் பல படங்கள். அனைத்தும் வெறும் சினிமா வசனங்கள் மட்டுமல்ல. இன்று இப் படங்களைப் பார்த்தாலும் ஒரு வாழ்வியல் நீதி அடங்கியிருக்கும். சினிமா தவிர சிறந்த தேச பக்தரவார். 1987ல் காலமான இவரது பெயரில் ஒரு விருது ஏற்படுத்தி இவரது நினைவு விழாவில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது!


அத்துடன் திரு. ஆர். நடராஜ் அன்றைய பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற உமா சந்திரன் அவர்களின் புதல்வர் ஆவார். இவரது நாவல் முள்ளும் மலரும். இதே பெயரில் ரஜினிகாந்த் நடிக்க மகேந்திரன் இயக்கத்தில் திரைப் படமாகவும் வந்தது.
நடராஜ் தனது பேச்சில் முள்ளும் மலரும் நாவல் 1965ல் கல்கியில் தொடராக வெளியானது. இது அன்று ரூ. 10,000 முதல் பரிசு பெற்ற நாவல் எனவும் இதை எழுதிய தனது தந்தை உமாசந்திரனுக்கு அமரர் ராஜாஜி அப்பரிசை வழங்கியதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டர்.


முன்னதாக நூலக போஷகர்கள் மகாலிங்கம், அன்பழகன் முன்னிலை வகிக்க, நூலக செயலர் திரு. ம. நித்தியானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் முன்னாள் காவல்துறை அதிகாரி நடராஜ், கல்கி ஆசிரியர் ரமணன் ஆகியோர் விருதுகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினர். அடுத்து விருது பெற்ற அழகிய சிங்கர் சரித்திர நாவலாசிரியர் ஸ்ரீமதி ஆகியோர் ஏற்புரை செய்தனர்.
நிகழ்ச்சியை திருமதி. பா. மகாலட்சுமி நன்கு தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய பலரும் மக்களுக்கு பயனுள்ள சமுதாயக் கருத்துக்களை கூறியது குறிப்பிடத்தக்கது.


கவிஞரும் பேராசிரியருமான திரு. வெ. நீலமேகம் நன்றியுரை வழங்கினார்.
இன்றைய கொரோனா நோய்த் தொற்று சூழலிலும் மக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். விழாவும் அரசு ஆலோசனைப்படி நோய்த் தடுப்பு மற்றும் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தே நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு விழா இனிதே முடிந்தது.