
‘‘கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் தேடிப் படித்தால், குழந்தையும் வெளி உலகத்திற்கு வந்தபிறகு புத்தகம் படிக்கத் தொடங்கும். அதனால்தான் என் மருத்துவமனையில் நூலகம் அமைத்திருக்கிறேன். இங்கு வரும் கருவுற்ற பெண்கள் தெனாலிராமன் கதை புத்தகத்தை எடுத்துப் படித்தால்கூட மகிழ்ச்சிதான்!
இந்த நூலகத்தில் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து, ஆங்கிலம், தமிழில் புதினம், சிறுகதை, கவிதை, தத்துவம், இலக்கியம், பக்தி இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, தன் வரலாறு, இயற்கை மருத்துவம், கருவுற்ற மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்குத் தேவையான ஆலோசனை புத்தகங்கள், பிறந்த குழந்தைக்கு பேர் வைப்பது தொடர்பான புத்தகங்கள், நோயாளிகளிடம் செவிலியர் நடந்து கொள்ளும் விதம்… என அனைத்துப் பிரிவிலும் புத்தகங்கள் இருக்கின்றன.
நூலகத்தை நிர்வகிக்க ஒரு நூலகரும் உண்டு. மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி, வெளியில் உள்ள கருவுற்ற பெண்களும் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அனுமதி இலவசம். ஆனால், ஒரு கண்டிஷன். புத்தகத்தைப் படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். மூன்றாம் தளத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. லிஃப்ட்டைத் தவிர்த்து பெண்கள் படியேறி மூன்றாம் தளம் செல்ல வேண்டும்…’’ புன்னகைக்கும் சசித்ரா தாமோதரன், இந்த நூலகத்தில் வகுப்புகளும் நடைபெறுகின்றன என்கிறார்.
‘‘கருவுற்ற பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் தனித்தனியாக நூலக அறையில் வாரத்தில் இரு நாட்கள் சின்னச் சின்ன உடல் இயக்க பயிற்சிகள், கர்ப்பகால உணவுப் பழக்கவழக்கம் குறித்த வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த வகுப்புகளுக்கு கணவர்களும் கட்டாயம் வரவேண்டும். வகுப்பு நிறைவடையும் நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். அப்போது, எதற்காக நூலகத்தில் பயிற்சிகளை வழங்குகிறோம் என்கிற ‘எபிஜெனட்டிக்ஸ்’ விளக்கத்தைச் சொல்லி லைப்ரரியின் முக்கியத்துவத்தை பெண்களுக்குப் புரிய வைக்கிறோம்.
பிரசவத்துக்குப் பின் மூன்று அல்லது நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் பெண்கள், தாங்கள் விரும்பும் புத்தகத்தை நூலகர் வழியாக இருக்கும் இடத்துக்கே வரவழைக்கலாம்.இதுதவிர குழந்தை பெற்றுத் திரும்பும் தாய்மார்களுக்கு, நினைவுப் பரிசாக மருத்துவமனை சார்பில் ஒரு மரக்கன்றை வழங்குகிறோம்.
அத்துடன் ஆர்கானிக் முறையில் தயாரான தூய்மையான காட்டன் உடையை உடுத்தியே குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். இந்த நூலகத்திற்கான புத்தகங்களை நண்பர்களே அன்பளிப்பாக வழங்குகிறார்கள்…’’ என்கிறார் டாக்டர் சசித்ரா தாமோதரன்.
நன்றி: குங்குமம்

