ஆக்சிமீட்டர்/பேயோன்

திரையிட்டுக் கதவடைத்த ஜன்னல்
திறந்தாலும் தெரியாத காட்சிகள்
ஃபிஷர்-ப்ரைஸ் படுக்கையிலிருந்து
தெரிகின்றன

சலிப்பூட்டும் அலைகள்
சீரான அகடுமுகடுகள்
தள்ளப்படுவது போல்
இழுக்கப்படுவது போல்
ஒன்றன்பின் ஒன்றாய்
வரிசையில் செல்லும்
அமைதியான அலைகள்

பின்பு
கூட்ஸ் வண்டியில் நகரும்
குல்லாய் வரிசை போல
முடிவற்றதோர் மலைத்தொடர்

அணிவகுப்பு சட்டென முடிந்து
தட்டைக் கோடுகளும் பெட்டிகளும்
கூம்புகளும் கோபுரங்களும்
அடியற்ற பாதாளங்களுமாய்
அழகிய கிராண்ட் கேன்யன் தோன்றுகிறது

சற்றுப் பெரிய ஆஸ்பத்திரி என்றால்
பள்ளத்தாக்குகளும் நதிகளும்
மரங்களும் மேகங்களும்கூடத்
தருவார்களோ?