எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம்/மாலன்

எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது உண்டா? எப்போது?

கேரளத்தில் திரூர் என்று ஒரு ஊர். அங்கு ஆண்டுதோறும் நவீன மலையாளத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் எழுத்தச்சனுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவிற்கு என்னையும் தென் தமிழகத்திலிருந்து இன்னொரு எழுத்தாளரையும் அழைத்திருந்தார்கள். அவர் ரயிலில் தூங்கிவிட்டார். திரூர் தாண்டிவிட்டது. விஷயம் தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு ஸ்டேஷனில் இறங்கினார்.

திரூருக்கு எப்படிப் போவது எனத் திகைத்து, அடுத்த ரயில் எப்போது என அறிந்து கொள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் விசாரிக்கப் போனார். டிக்கெட்டை வாங்கிப் பார்த்தார் மாஸ்டர். “உங்களுக்கு திரூர் வரைதான் டிக்கெட் இருக்கிறது. ஒரு ஸ்டேஷன் நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கிறீர்கள். அதற்கான கட்டணத்தையும் அபராதத்தையும் கீழே வைத்தால்தான் இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே போக முடியும்” என்று ஒரே போடாகப் போட்டார். மிரண்டு போனார் நம் எழுத்தாளர். திருவிழாவில் காணாமற் போன குழநதை போல மலங்க மலங்க விழித்தார்.

“திரூரில் என்ன விசேஷம்?” என்று விசாரித்தார் மாஸ்டர்.

“ஐயா நான் ஒரு எழுத்தாளன். எழுத்தச்சன் விழாவிற்கு அழைத்தார்கள் வந்தேன். தூங்கிப் போய்த் தொலைந்தேன்’ என்றார் எழுத்தாளர் நொந்து போய்..

“என்ன சொன்னீர்கள்? எழுத்தாளனா?’ நம் நண்பர் பையிலிருந்து புத்தகங்களை எடுத்துக் காண்பித்தார்.

“சாகித்ய அகாதெமி கூட கொடுத்திருக்கிறார்கள்’ என்றார் முனகலாக.அவ்வளவுதான். சொடக்குப் போடுகிற நேரத்தில் தலைகீழாக மாறிவிட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். ‘எழுத்தாளரா, எழுத்தாளரா நீங்கள், சொல்லவே இல்லையே!” என்றார்.

எங்கேயோ பார்த்து சமிஞ்கை செய்தார். சூடாக டீயும், வேக வைத்த வாழைப்பழமும் வந்தது. டிக்கெட் காசைக் கொடுக்க பர்ஸை எடுத்தார் எழுத்தாளர். ‘அட! உள்ள வைங்க சார்!” என்று செல்லமாக அதட்டினார்.

சற்று நேரம் கழித்து, ஒரு போர்ட்டர் பையைத் தூக்கிக் கொண்டு பின் வர, எதிர்ப்புறம் வந்த ரயிலில் எழுத்தாளரை முதல் வகுப்பில் ஏற்றி விட்டார். அந்த டிக்கெட் கலெக்டரிம் ஏதோ சொன்னார். இந்த எதிர்ப் பயணம் முழுதும் இலவசம். அந்தக் கலெக்டர் பவ்யமாக எழுத்தாளரை வரவேற்று, திருரில் இறக்கிவிடும் போது அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஏதோ சொல்ல, மறுபடி டீ, போர்ட்டர் என்று ராஜ உபசாரம்!இதை நண்பர் விவரித்த போது எழுத்தாளனாகப் பிறந்தால் கேரளத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருக்கிறேனே தவிர ஏண்டா. எழுத்தாளனாகப் பிறந்தோம் என ஒரு போதும் நினைத்ததில்லை

நாராயணன், மாலனாக மாறியது ஏன்?…..எழுத ஆரம்பித்தது ஒரு இரண்டும் கெட்டான் பருவத்தில். 13 வயதில் கையெழுத்துப் பத்திரிகையில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.அச்சுப் பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் என்ற ஆசை வந்தபோது என் ஜன்னலுக்கு வெளியே அரசியல் அனல் பறந்து கொண்டிருந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சி. நானும் அதில் முழங்கால் அளவு இறங்கியிருந்தேன். திராவிட இயக்கத்துத் தலைவர்கள் எல்லாம் இயற்பெயரையும் இறைவனையும் துறந்துவிட்டுத் தமிழ்ப் பெயர்களைச் சூடிக் கொண்டிருந்தார்கள். சாமி கண்ணைக் குத்திவிடும் என்ற பயத்தால் இறைவனைத் துறக்க தைரியமில்லை. ஆனால் தமிழ்ப் பெயரைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் வசித்த தெருவில் மார்கழி மாதத்தில் திருப்பாவை வகுப்புக்கள் நடக்கும் தங்கையை அந்த வகுப்பில் கொண்டு விடப் போனபோது இனிய தமிழ் என் காதில் விழுந்தது. இரவல் வாங்கி திருப்பாவை படித்தேன். அதில் மாலே! மணிவண்ணா! என்று ஆண்டாள் நாராயணனை அழைக்கக் கண்டேன். ‘அடியார்களை உன் மீது மயக்கம் கொள்ளச் செய்த மாலனே! என்று அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகா! தேடிக் கொண்டிருந்த பெயர் கிடைத்து விட்டது. 19 வயதில் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் என் கவிதை வி.வே. மாலன் என்ற பெயரில் பிரசுரமாயிற்று. வி.வே. என்பது என் இனிஷியல். அந்தக் கவிதையைப் பார்த்த அம்மா, ‘ ஏண்டா உன் பெயரில்தான், அப்பா பெயரும் என் பெயரும் இருக்கே, எதுக்குத் தனியா இனிஷியல்? என்றார் விழித்தேன். அப்பா பெயர் மணி அம்மா பெயர் லலிதா ஆங்கிலத்தில் இருவர் பெயரின் முதல் இரு எழுத்துக்களும் (MA,LA,) என் பெயரின் முதல் எழுத்தும் 👎 அதில் பொதிந்திருந்தது.அம்மா அதைச் சுட்டிக் காட்டியதற்குப் பிறகு அந்தப் பெயரை விட மனது வரவில்லை- மாலன்இணையத்தில் படித்தது

தகவல் : கந்தசாமி ஆர்