கண்ணே, என் கல்லீரலே/எஸ் வி வேணுகோபாலன் 

உடல் நலம்           


கோ
வில்பட்டி ராமையா  பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.  திருக்குறள்   ராமையா என்றும் சொல்வார்கள்.  ‘பதின் கவனகர்’ என்று பெயர் பெற்றவர்.  அதாவது ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு  விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயலாற்றத் தக்கவர்.  (தசாவதானி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் பதின் கவனகர்). 

அவரது நிகழ்ச்சிகளைப்  பார்க்கிறவர்களுக்கு பிரமிப்பாக இருக்கும்.  முப்பது இலக்க எண் ஒன்றை   ஒவ்வொன்றாகச் சொல்லி கரும்பலகையில் எழுதி வருவார் ஒருவர்.  நான்கு இலக்கக் கூட்டல்  தொகையை முதலிலேயே போட்டு வைத்துவிட்டு அதனைக் கொண்டுவர எந்தெந்த எண்களைக் கூட்ட வேண்டும் என்று கேட்பார் அடுத்தவர். 

ஒரு புதிய செய்யுளுக்காகக் கடைசி வரியைச் சொல்லி (ஈற்றடி) அதை வெண்பாவாக எழுதச் சொல்லிக் கேட்பார் இன்னொருவர்.  திருக்குறளில் ஒரு கேள்வியை எழுப்புவார் எதிரே இருக்கும் கூட்டத்திலிருந்து ஒருவர்.  குறிப்பிட்ட சொல்லில் துவங்கும் அல்லது  முடியும் குறளைக் கேட்பார் இன்னொருவர்.  இத்தனைக்கும் இடையே, சிறிய மணியோசை ஒன்று விட்டு  விட்டுக் கேட்கும்.    மெல்லிய மலரால் அடிக்கடி அவரது முதுகைத் தொடுவார் ஒருவர்.

நிகழ்ச்சி முடியும்பொழுது, எத்தனை முறை மணி ஒலித்தது என்றும், எத்தனை முறை பூவால் தொட்டனர் என்றும் அனாயாசமாக கணக்கு கொடுப்பார் ராமையா.  முப்பது இலக்க எண்ணை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என்று ‘தடதட’ என்று சொல்வார். இலக்கண சுத்தமாகப் பொருளோடு வெண்பா எழுதி முடிக்கப்பட்டிருக்கும். கூட்டல் அம்சமாக அமைந்திருக்கும் எப்படி மடக்கிக் கேட்ட குறளையும் ஒப்பித்திருப்பார் ராமையா…

ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாது,  ஒரே நேரத்தில் இத்தனை வேலைகளைச் செய்யத்தக்க மனிதர்கள் வணங்கத் தக்கவர்களாகிறார்கள்.  அவர்களது கலையை, அவர்களது இருப்பைப் பேணி வரவேண்டியது சமூகத்தின் பொறுப்பாகிறது.  அப்படி அசாத்தியமான வேலைகளைச் செய்யத் தக்க உள்ளுறுப்புகள் மனிதர்களின் உடலிலும் இருக்கின்றன. 

அவர்களில் மூத்தவர், செயல் வீரர், அளவிலும் சரி அரும்பெரும் பணிகளிலும் சரி  பெரியவர், அடக்கமானவர், தான் நலிந்தாலும் தன்னைச் சார்ந்தவர்கள் நலிந்துவிடக் கூடாதென ஓடாகத் தேய்ந்து உழைப்பவர் அன்புக்குரிய நமது அண்ணன் ‘செம்பழுப்புத் திலகம்’ கல்லீரலை உங்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். 

ஒரு காலத்தில் உடல் கூறுகளை ஆய்வு செய்தவர்கள், கல்லீரல் தான் இதயப் பகுதி என்று தவறாகக் கருதி இருக்கின்றனர்.  அங்குதான் இரத்தம் பம்பிங் செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது என்று கூட நினைத்திருக்கின்றனர்.  இரத்தக் குழாய் பாதிப்புகள், உடலின் வீக்கங்கள், இரத்த வாந்தி, மூலம்  போன்ற பிரச்சனைகளுக்கான காரணங்கள் குறித்த தேடலில் அவர்கள் இந்த முடிவை எட்டி இருந்திருக்கலாம். பிறகு ஏராளமான ஆராய்ச்சிகளுக்குப் பின் இந்த அற்புத உறுப்பு குறித்துப் பெற்ற  ஞானம் வியப்புக்குரிய செய்திகளை அறிய வைத்தது.  உடல் உள்ளுறுப்புகளில் ஆகப் பெரியது கல்லீரல்.  அதிமுக்கியமான உறுப்பும் கூட.


நாம் உட்கொள்ளும் எந்தப் பொருளையும் – அது உணவோ மருந்துகளோ எதுவானாலும் குடல் பகுதியிலிருந்து (இரத்தக் குழாய்கள் மூலம்) உறிஞ்சி எடுக்கிற கல்லீரல் அவற்றைச் செரிப்பதற்கான என்சைம்களைத் தானே சுரக்கிறது.    அதற்குமுன், அவற்றில் இருக்கும் எந்த நச்சுப் பொருளையும் ஒண்டிக்கு ஒண்டி நின்று போராடி முறியடித்து நச்சுத்தன்மையற்றதாக   மாற்றுகிறது. பித்த நீரைச் சுரக்கிறது.  பல முக்கிய ஹார்மோன்களையும் உற்பத்தி செய்து தருகிறது.  இரத்தத்தை உறையவைக்கும் முக்கிய பொருள், கல்லீரலின் கொடை. 

இப்படி வேலைகள் நடக்கும் இடமாகவும், உற்பத்தித் தலமாகவும் இயங்குகிறது கல்லீரல்.  உடலின் வெப்பத்தை ஒரு சீராகவும், தக்க நிலையிலும் இருக்க வைக்கச் செய்வதும் அவுக தான்.  உடல்நலக் காப்பாளர் என்ற விருது கூட அவருக்கு அறிவியல் ஆய்வாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆத்திர அவசரத்திற்கு உணவைச் சேமித்து வைப்பதும், குளுகோஸ் – இரும்பு – தாமிரம் போன்ற சத்துக்களை பத்திரப்படுத்தி வைப்பதும் இங்கிட்டுதேன்.   உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தில் முக்கால் பங்கு, கிட்டத்தட்ட 1500 மில்லிகிராம் அளவு, கல்லீரலின் சிறப்புத் தயாரிப்பு.   நிமிடம் ஒன்றிற்கு சுமார் ஒன்றரை லிட்டர் இரத்தம் கல்லீரல் வழியாகப் பாய்கிறது.

கல்லீரல் இத்தனை அசகாய சூரனாய்த் திகழ்வதற்கு முக்கிய ரகசியம் அவரது இளமைத் துடிப்புங்கய்யா .. மூளையிலோ, சிறுநீரகத்திலோ உள்ள செல்கள் அழிந்துகொண்டே வந்தால் அவற்றிற்கு புத்துயிர்ப்பு கிடையாது.  நம்மாளு வேற ரகம்.   இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது மாதிரி தன்னைப் புத்துப்பித்துக் கொள்ளும் தன்மை கல்லீரலுடையது.

இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளவரை விட்டு வைக்குமா சமூகம்?  மார்பெலும்புகளுக்கடியில்,  வயிற்றுப் பாகத்தில் குடியிருக்கும் கல்லீரல் எளிதான தாக்குதலுக்கு உட்பட நேர்வதும் நிகழத் தானே செய்யும்.  ஆகவேதான் கல்லீரலைக் காக்க வேண்டியது முக்கியமானதாகிறது. 

மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களால் நலிவுற்றாலும், தன்னை வருத்திக் கொண்டாவது அவர்களுக்குச் சேவை செய்கிறது  கல்லீரல். ஒரு பாசமிக்க தாயைப் போல !  அதனால் தானோ என்னவோ தனக்கு பாதிப்பு ஏற்படுவதைக் கூட சட்டென்று வெளிப்படுத்தாத தன்மை கொண்டிருக்கிறது.  இது கவனிக்க வேண்டிய அம்சம்.

தண்ணீர் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பரவும் கிருமித் தொற்று, பாக்டீரியா, வைரஸ் தாக்குதல், திணறடிக்கும் வேதியல் கலவை அடங்கிய உணவு மற்றும் சில மருந்துப் பொருள்களும், எல்லாவற்றிலும் முக்கியமாக ஆல்கஹால் போன்றவையும்  கல்லீரலைக்  குறி வைக்கின்றன.  உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை தற்காலத்தில்  எவ்வளவு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்பதைத் தெரிந்திருக்கிறோம்.  தட்ப வெப்பத்திற்கு ஏற்றதாகவும், சரி விகிதமானதுமான  உணவு எடுத்துக் கொள்வது கல்லீரலை மதிப்பதாகும்.  அதில் செய்யப்படும் அத்து மீறல்கள், நேரக் கட்டுப்பாடு அற்ற தன்மைகள், விரைவு உணவு (Fast Food) கலாச்சாரங்கள் போன்றவை கல்லீரலை சோதனைக்கு உட்படுத்துபவை.

மஞ்சள் காமாலை என்பது நோயல்ல, கல்லீரல் நோயுற்று இருப்பதன் ஓர் அறிகுறி.  வித விதமான நோய்கள் கல்லீரலின் பாதிப்பை வெளிப்படுத்தக் கூடும்.  நமது அக்கறை அதைப் பாதுகாப்பதாக இருக்கட்டும். மஞ்சள் காமாலை என்பதிலேயே எத்தனையோ வகைகள் உண்டு.  ஹெபாடிடிஸ் என்று அழைக்கப்படும் இதில் எத்தனையோ பிரிவு உண்டு.  ஒவ்வொன்றின் தன்மையும், தீவிரமும், சிகிச்சையும் வெவ்வேறானது.  இதில்தான் படித்தவர்கள் கூடப் புரியாமல் ஏமாந்துவிடுவது.  அறியாமையில் உழல்பவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 

கல்லீரலின் பாதிப்பை உணர்ந்து எடுக்கும் மருந்துகளானால் அது நாட்டு மருந்தானாலும் பிரச்சனையில்லை.  எல்லாவற்றுக்கும் ஒன்றுபோல் மருந்து கொடுப்பவர்களிடம் சிக்கிக் கொண்டால் விளைவுகள் விபரீதம் ஆகக் கூடும்.  கீழாநெல்லியும் , கரிசலாங்-கண்ணியும் ஒப்பற்ற மருந்துக் குணங்கள்  உள்ளவைதான்.  அதே நேரத்தில் கல்லீரலின் நிலையை ஆராய்ந்து பார்த்து எடுக்கும் மருந்துதானே குணப்படுத்தும்? (இணையதளத்தில் வாசிப்பதை வைத்து எல்லாம் தமக்குப் பொருந்துவதாக நினைத்துக் கொண்டு தாங்களாகவே சிகிச்சையை அமைத்துக் கொள்பவர்களையும் இங்கே சற்று உஷார் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.) 

மரபார்ந்த அனுபவமும், பாரம்பரிய மருத்துவ அறிவும் இகழத் தக்கதே அல்ல.  ஆனால், அறிவியல்பூர்வ அணுகுமுறையற்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் சொல்ல வருவது.  கியூபா, மக்கள் சீனம் போன்ற நாடுகளில் பண்டைய மருத்துவ ஞானம் உள்ளவர்களைச் சிறப்பிப்பதோடு, அவர்களது திறமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கின்றனராம்.  தீக்காயங்களுக்கு அசாத்தியமான முறையில் மூலிகை வைத்து குணப்படுத்திய முதியவர் ஒருவரை பீஜிங் மருத்துவமனை கொண்டாடி இருக்கிறது.  உயிரோடு கொண்டு வந்த யாரையும் நெருப்புக் காயங்களிலிருந்து குணமாக்கி விட முடியும் என்ற அவரது ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

பிறந்த குழந்தைக்கு ஏன் மஞ்சள் காமாலை வருகிறது என்று சிலர் நினைப்பதுண்டு.  கருவாக இருக்கும் வரை, அதன் கல்லீரல் செயல்பாட்டில் குதிப்பதில்லை.  தாய் பொறுப்பெடுத்துக் கொள்கிறாள்.  அதனால் தான், பிறந்த மாத்திரத்தில் குழந்தையின் கல்லீரல் வேக வேகமாகத் தனது கடமையை ஆற்றத் தொடங்குவதால், காமாலை ஏற்படுகிறது.  அதைச் சரி செய்ய சிகிச்சை, மருந்து மாத்திரை எதுவும் தேவைப்படாது.  காலை நேரத்தின் இளவெயிலில் குழந்தையின்  கண்ணில் மட்டும் படாதவாறு அதன் உடலுக்குச் சூரிய ஒளியைப் பெற்றுத் தந்தால், தன்னைப் போல் காமாலை அறிகுறிகள் விடைபெற்றுச் சென்றுவிடும். 

ஏன் கண்ணில் படக் கூடாது என்றால், பிறந்த குழந்தைக்கு கண்களை இமைக்கத் தெரியாது. சக்தி வாய்ந்த கதிர்கள் கண்ணில் பட்டால் பார்வை பாதிக்கப்படும்.

கல்லீரலுக்கு மது ஏற்படுத்தும் தாக்குதல் பற்றி எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் பொதுவாக ஒரு தப்பெண்ணம் நிலவுகிறது.  சீமைக்காரன் சரக்கடிச்சா ஒண்ணும் செய்யாது,  நமக்கு மட்டும் எப்படி என்று…எப்பேர்க்கொத்த ஜாம்பவான் ஆனாலும், அளவுக்கு மீறிய ஆல்கஹால் அதன் வேலையைக் காட்டும்.  ஆனால்  நிலைமை மோசமாகும் வரை பரிசோதனையில் (Liver Function Test) காட்டாது. ஆல்கஹால் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டிவிடுகிறது என்பதால் பரிசோதனை அறிக்கை பளபளவென்று இருக்கும். அதாவது அறிக்கையே கூட போதையில் இருக்கும் போல.   ஒரு நாள் விழுந்து எழுந்திருக்கும்போது விழித்துக் கொண்டு விடை தேடினால் வேதனையாக இருக்கும். 

நாள் முழுக்கக் கஷ்டப்பட்டு உழைக்கும் பாட்டாளிகள், தங்கள் உடல் அலுப்பு தீர உதவும் என்று கருதி பழக்கப்படுத்திக் கொள்ளும் குடிப் பழக்கம் அரும்பாடுபட்டு ஈட்டிய காசை மட்டுமல்ல, உடல் நலத்தையும் சேர்த்து நாசமாக்குகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்பதன் முக்கிய பொருள்  ஆல்கஹால் கல்லீரலைத் தான் முதலில் கடுமையாகத் தாக்கும் என்று உணரவேண்டும்.  அவர் பாதிப்பு அடைந்தால், எத்தனை வகை வேலைகள் தடைப்படும் என்பதை விரிவாகவே பார்த்துவிட்டோம். கல்லீரல்தான் மருந்துகளைப் பிரித்துப் பார்த்து, படித்துச் சேர வேண்டிய பகுதிக்கு அனுப்பி வைப்பவர். கல்லீரல் பழுது அடைந்தால், எந்த நோய்க்காகவும் எடுக்கும் எந்த மருந்தும் வேலை செய்யாது. பலன் அளிக்காது. 

குடிப்பழக்கம் எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது சொல்லித்  தெரிய வேண்டியதில்லை.   கல்லீரல், உடலின் பலவித செயல்பாடுகளுக்கான கதாநாயகன் என்பதால், அவரை அடித்துப் போட அனுமதித்தால் உடல் என்னவாகும் என்பதை விளக்க வேண்டியதில்லை. தொடர்ச்சியான குடிப்பழக்கம் அந்த வேலையைத்தான் செய்கிறது. அதைக் கைவிட வேண்டும்.

கோவில்பட்டி ராமையா பற்றிய முக்கியமான இன்னொரு சங்கதி உண்டு.  அவர் கண்பார்வை இழந்தவர்.  ஆனாலும் பார்வை இருக்கும் மனிதர்களை அசரடிக்கும் ஆற்றல் அவருக்கிருந்தது.  நமது நேரடி கண் பார்வையில் இல்லாத கல்லீரல், கண்ணை இமையிரண்டும் காப்பது போல் நம்முடலை வண்ணமுறக் காக்கின்றது.  அதைக் கண்ணுக்கும் கண்ணாகக் காத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. 

மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளில் இருந்து

“உனக்கு எதனால் இந்த வியாதி வந்திருக்குன்னு தெளிவாச் சொல்ல முடியல.  ஒரு வேளை குடி போதை காரணமா இருக்கலாம்…”

“சரிங்க டாக்டர்.  உங்களுக்குத் தெளிஞ்சதுக்கு அப்புறம் கண்டு பிடிச்சுச் சொல்லுங்க…..”

One Comment on “கண்ணே, என் கல்லீரலே/எஸ் வி வேணுகோபாலன் ”

Comments are closed.