இனிக்கும் தமிழ் – 120/- டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம் – மலரும் காதல்

பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்போம்

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர்.

அவள், அவனைப் பற்றி ..அவன் பெயர் என்ன என்கிறாள்.
பின் , அவன் எப்படிப்பட்டவன் என்கிறாள்.
அவன் இருக்குமிடம் எது என்கிறாள் அடுத்து…
அவளது தாய்..தந்தையை விடுத்து அவன் மீது பைத்தியமாய் ஆகிறாள்.

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும் அவன் நினைப்பு தான்.

தன்னை தானே மறந்தாள்.
தன் பெயரையே மறந்தாள்
அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் = முதலில் அவளுடைய பெயரைக் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் = அவனுடைய குணநலன்களை கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் = அவன் இருக்கும் இடத்தை கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் = அவன் மேல் பைத்தியமாக ஆனாள்
(பிச்சி = பைத்தியம்)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் = அம்மாவையும்
அப்பாவையும் விட்டு விலகினாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை = பழக்க வழக்கங்களை மறந்தாள்
தன்னை மறந்தாள் = தன்னையே மறந்தாள்
தன் நாமம் கெட்டாள் = தன் பெயரையும் மறந்தாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே = அவன் பாதங்களை சரணம் அடைந்தாள்