இனிக்கும் தமிழ் – 124

நங்கையும்..நாவல் பழமும்/டி வி ராதாகிருஷ்ணன்

வண்டு ஒன்று மலரில் அமர்ந்து தேனை வயிறு முட்ட உண்டு சுவைக்கின்றது.மதுஅருந்திய கிறக்கத்தில் தள்ளாடி கீழே விழுந்து கிடக்கிறது.

அவ்வழியே..கருவண்டு கண்ணினாள்..பேரழகு நங்கை ஒருத்தி வருகின்றாள்.கீழேமயக்கத்தில் அசையாது கிடக்கும் வண்டினைக் காண்கின்றாள்.அது நாவல் பழம் எனக் கருதி..அதைக் கையில் எடுத்து..தன் உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

இதனிடையே போதை சற்றே தெளிந்த வண்டு லேசாக கண்களைத் திறந்து பார்த்தது.

பளீச்சென பிரகாசமாய் இருந்த அவள் முகத்தைக் கண்டு..நிலவு வந்து
விட்டது..இரவு வந்து விட்டது போலும் என்று நினைத்தது.

இப்போது நாம் எங்கிருக்கிறோம் என்று சற்று..முற்றும் பார்த்தது.மலர்
போன்ற மிருதுவான அவள் கைகளையும்..அதன் நிறத்தையும் கண்டு..அந்தக் கையைத்தாமரை மலர் என்று நினைத்தது.இரவு வந்தால் தமரை மலர் மூடி விடும்..தான் உள்ளே அக்ப்பட்டு மடிந்து விடுவோம் என எண்ணி வேகமாகப் பறந்ததாம்.

அந்தப் பெண்ணிற்கோ..இது என்ன புதுமையாய் இருக்கிறது..பழம் பறக்கிறது
என்று வியப்பு உண்டானதாம்.

என்னே..ஒரு அற்புதமான கவி நயமும்..கற்பனை நயமும் நிறைந்த பாடல்

இந்த செய்யுள்

தமிழ் இலக்கியங்களில் பிற்காலத்தில் தோன்றிய விவேக சிந்தாமணியில்
காணப்படும் ஒந்று..நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்
இது.பல அரிய கருத்துகளை..உலகியல் அனுபவப் பாடங்களை பாடல்களாக ஆக்கிக்
கொடுத்துள்ளார்கள்.தொகுத்தவர் யார் என்ற விவரங்கள் இல்லை.தொகுப்புநூல்
என்பதால்..பாடல்களின் வரிசையில் மாறுபாட்டையும்..மாறுபட்ட பாடல்களையும்
காணமுடிகிறது.

இனி அந்தப் பாடல்..

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
தியங்கியே கிடந்தது கண்டு
தான்அதைச் சம்புவின் கனியென்று
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வான்உறு மதியம் வந்ததென்றெண்ணி
மலர்க்கரம் குவியுமென் றஞ்சிப்
போனதுவண்டோ! பறந்ததோ பழம்தான்
புதுமையோ இதுவெனப் புகன்றாள்….

பொருள்

தேன் நுகர்: தேனை நுகரும்
வண்டு: வண்டு
மதுதனை: மதுர சுவை உடைய தேனை
உண்டு: அருந்தி
தியங்கியே: போதையில் மயங்கி
கிடந்தது: நினைவில்லாமல் இருந்தது
கண்டு: பார்த்து
சம்புவின் கனி: நாவல் கனி
தடங்கையில்: கையில்
வான்உறு: வானில் இருக்கும்
மதியம்: மதி (சந்திரன்)
எண்ணி: நினைத்து
மலர்க்கரம்: மலரின் இதழ்கள்
குவியும்: குவிந்து மூடிவிடும்
என்று அஞ்சி: என்று பயந்து
போனது வண்டோ: வண்டு பறந்தது
பறந்ததோ பழம்தான்: பழம் தான் பறந்தது
பகன்றாள்: ஆச்சரியமாய் கூறினாள்