
மனிதனென்ற புத்தகம்
வாழுகின்ற தத்துவம்
அவரவர் பார்வையில்
ஆளுக்கொரு பொருள்தரும்.
பொருளில்லாப் புத்தகம்
பொருளைத் துரத்தும் அனுதினம்
அறிவுள்ள புத்தகம்
யாரும் அறியாமல் முடங்கிடும்.
பக்கங்கள் மாறும் அது
படைப்பவனின் நியாயம்
தம்மை படிப்பவரைத் தேடும்
புத்தகங்கள் பாவம்.
தலைப்பில்லாப் புத்தகம்
இங்கு பலகோடி ஆயிரம்
அவை குப்பைகளாய்ப்போவதற்கு
வாழும் சூழ்நிலையே காரணம்.
புத்தகங்கள் ஒன்றாய்க் கலக்கும்
வாழ்க்கையெனும் நூலகம்
சில கைபடாமல் போவது
காலம் செய்த தாமதம்.
மனிதர்களைப் படிக்கின்ற
புத்தகங்கள் அவசியம்
அது எல்லோருக்கும் கிடைக்காது
வரும் யுகங்களுக்கு ஒருதரம்.
