விஷ்ணுபுரம் அமைப்பு தமிழ் விக்கி என்ற பக்கத்தை கலை, இலக்கியம், பண்பாட்டுக்காக/வாசுதேவன்

சிறுவயதில் நூலகங்களில் என்சைக்ளோபீடியா பார்த்து மலைத்து நின்ற காலம் உண்டு. அதை வாங்கவேண்டும் என்ற வேட்கை தணியவே இல்லை. பிரிட்டானியா என்சைக்ளோபீடியா விலை அதிகம். எட்டா கனி. 90 களில் இணையம் அறிமுகமானவுடன் கையடக்கமாக சிடி ராமில் வெளியிட்டார்கள். அதுவே அப்போது ரூ 5000. அதை பல வருடங்களாக வாசித்துள்ளேன். மிக மிக பயனுள்ள தொகுப்பு. அதற்குப்பிறகு இணையத்தின் வீச்சு அதிகமானவுடன் என்சைக்ளோபீடியாவின் அச்சு பதிப்பின் மோகம் குறைந்தது. இதன் நீட்சியாக விக்கிபீடியா அறிமுகமானது. எந்த லாப நோக்கமும் இன்றி அடிப்படை தகவல்களுடன் உசாத்துணையோடு இணையத்தில் அறிமுகமானது. இதுவும் ஒரு வரப்பிரசாதம். தமிழில் திரு.பெரியசாமி தூரன் தமிழ் கலைக்களைஞ்சியத்தை உருவாக்கிய முன்னோடி. இன்றளவிலும் தமிழுக்கு அவர் அளித்த கொடை. ஆனால் இது விரிவாக்கம் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. 80 களில் அறிவியலுக்கு கலைக்கதிர் என்ற இதழ் வெளிவந்தது. அதேபோல் மணவை முஸ்தபா ஆசிரியத்துவத்தில் யுனெஸ்கோ கூரியர் என்ற இதழும் வெளிவந்தது. இதெல்லாம் தமிழில் நடந்த ஆச்சரியங்கள். தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் பல நூல்கள் டிஜிட்டல் வடிவத்தில் வாசிக்கமுடியும். அழிக்கமுடியாத, எரிக்கமுடியாதது டிஜிட்டல் நூலகம். ஆனால் தமிழ் கலைக்களைஞ்சியம் இல்லை. தமிழ் விக்கிபீடியா பக்கங்கள் தரமற்று ஏனோ தானோ என இருக்கிறது. உருப்படியான நம்பக்தகுந்த தகவல்கள் இல்லை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அமைப்பு தமிழ் விக்கி என்ற பக்கத்தை கலை, இலக்கியம், பண்பாட்டுக்காக உருவாக்கியுள்ளார்கள் என்ற செய்தி வரவேற்க்கத்தக்கது. வரும் 7ம்தேதி இதன் தொடக்கவிழா நடக்க இருப்பதாக அறிகிறேன். நல்ல முன்னெடுப்பு. இதன் உள்ளடக்கம், விடுபடல்கள், தேர்வுகளை இதை வாசித்துதான் முடிவு செய்யவேண்டும். இருந்தபோதிலும் தமிழில் நடக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.