
மும்தாஜ் மரணத்தின் போது அவரது மகள் ஜகானாராவுக்கு வயது 17. நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜகானாராவுக்கு வழங்கினார் ஷாஜகான். மும்தாஜ் மறைவிற்குப் பின் ஷாஜகானைச் பார்த்துக் கொண்டார் ஜகானாராவ். ஔரங்கசீப் ஷாஜகானை வீட்டுக்காவலில் வைத்திருந்த போது அவர் மட்டுமே தந்தையைக் கவனித்துக் கொண்டார். தந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
ஷாஜகானின் மூத்த மகன் தாரா புகழ் பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள்
படிப்பதற்காக உபநிஷத்துக்களை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மர்ம உல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக்கோட்பாடுகளுக்கான பொதுத் தன்மையைப் பேசுகிறது.
இப்போது உள்ள பழைய தில்லி அன்று ஷாஜகனாபாத் என்று அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும் போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களைத் தானே முன்னின்று அமைத்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சொளக்.
1644 மார்ச் 29-ம் தேதி மூத்த சகோதரன் தாராவின் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போது ஜஹானாராவின் பட்டு மேலாடையில் தீப்பிடித்து அவரது தாடையிலும் பின் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டது. அவரது அழகான முகம் சிதைந்து போனது. எட்டு மாதம் தொடர் சிகிச்சைக்குப்பின் அவர் குணமானார்.
1658 -ம் ஆண்டு ஷாஜகான் உடல் நலமற்றுப் போனார். 1659-ம் ஆண்டு
ஔரங்கசீப்பின் ஆட்கள் தாராவை தலை வேறு உடல் வேறாக வெட்டிக் கொன்றார்கள். ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஔரங்கசீப். அவரது மகள் ஜகானாராவ் கடைசி வரை உடன் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டார். ஷாஜகான் இறப்பிற்குப் பின் ஔரங்கசீப் ஜகானாராவுக்கு மீண்டும் அரண்மனையின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்ததான். 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த அவர் 1681-ம் ஆண்டு இறந்து போனார்.
அவருக்கு நிஜாமுதீன் தர்க்காவில் கல்லறை அமைக்கப்பட்டது. ‘ என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த்தைகள் அங்கே
பொறிக்கப்பட்டுள்ளன.ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதைகளின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி: எனது இந்தியா
முகநூலில் தகவல் தந்தவர் : கந்தசாமி.ஆர்
