யோகியின் மீது வெளிவந்த முதல் கவிதை நூல்கள் !

பகவான் யோகி ராம்சுரத்குமார் எழுபதுகள் துவங்கி இன்று வரை கவிஞர்களின் பாடுபொருளாக , பாடாதாரைப் பாட வைக்கும் பரமனாகத் திகழ்கிறார் .
யோகியின் மீது முதலில் தமிழ் கவிதை நூல்கள் வெளியிட்ட பெருமை கலைமகள் ஆசிரியர் அமரர் வாகீச கலாநிதி கி .வா. ஜ . அவர்களையேச் சேரும் . 1980 களில் ” அன்பு மாலை “
” அன்புக்கதம்பம் ” ” புகழ் மாலை ” ” துதி மணி மலை ” என பலப் பல கவிதைத் தொகுதிகள் யோகியின் மீது கி வா ஜ அவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுதிகளாக வெளிவந்தன .
கி வா ஜ அவர்கள் தமது முதல் சந்திப்பை அந்த நூலில் விவரிக்கிறார் :
” திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேசுவரருடைய திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது . பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். நானும் போயிருக்கிறேன். மக்களின் பக்தியுணர்வு வெள்ளமாகப் பொங்கி அலை பாய்கிறது…..அந்த வீட்டில் மாடியில் ஒரு ஞானி இருக்கிறார் . வாருங்கள் , பார்த்து இன்புறலாம் என்று ஓர் அன்பர் என்னை அழைத்துச் செல்கிறார். அங்கேய் போகிறேன் .
சுற்றிச் சூழப் பல அன்பர்கள் நின்றும் அமர்ந்தும் இருக்க , ஒருவர் தலையில் தலைப்பாகையும் உடம்பில் சட்டையும் நரைத்த வெள்ளைத்தாடியும் மூலகச்ச வெள்ளாடையும் உடையவராக அமர்ந்திருக்கிறார். ஆடை அழுக்காக இருக்கிறது . யாரோ வடநாட்டார் என்று எண்ணுகிறேன். பல நாள் குளிக்காமல் இருக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு .
அந்தப் பெரியவர் ஆங்கிலத்தில் பேசுகிறார் . இடையிடையே கொச்சைத்தமிழில் உரையாடுகிறார். இடை இடையே உடம்பெல்லாம் குலுங்கச் சிரிக்கிறார் . வெறும் சிரிப்பல்ல : அடுத்தடுத்து பல்லவி , அநுபல்லவி , சரணம் போலத் தொடர்ந்து வரும் நீண்ட சிரிப்பு . இவரால் இப்படி எவ்வாறு சிரிக்க முடிகிறது என்று எண்ணுகிறேன் . உடன் இருப்பவர்கள் எல்லார் முகத்திலும் ஒரு வகையான மலர்ச்சி …
பின் ஒரு நாள் என் அன்பர் சிவகாசி திரு ஞானகிரி கணேசன் என்னைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார். அந்த யோகி ஒரு வீட்டில் தங்கியிருந்தார் . அங்கே சென்று அவரை தரிசித்து வணங்கினேன். உடன் இருந்தவர்களிற் சிலர் பாடினார்கள். ” நானும் பாடலாமா ? ” என்று கேட்டேன் . ” ஆகா ! பாடலாம் ” என்றார்கள் . நான் கந்தர் அலங்காரத்தில் இருந்து சில பாடல்களைப் பாடினேன் . பிறகு அந்த யோகியைப் பற்றிப் புதிய பாடல்களைப் பாடலானேன் …
அவருக்கு உற்சாகம் வந்தபோது நடனமிடுவார் .” ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராமா !” என்று சொல்லி ச் சொல்லி ஆடுவார். அந்தக் குரலில் வெண்கலத்தின் தொனி இருக்கும் . அந்த ஒலி வாயிலிருந்து மட்டும் வருவதல்ல ; நாபீக்கமலத்திலிருந்து புறப்பட்டு வெளிவந்து ஒலிக்கும் நாதம் அது. திருப்பித் திருப்பி ” ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா ! ” என்று நீட்டும்போது அதில் ஒரு கார்வையின் இன்னோசை எழும் . அப்போது அவர் அந்த ராமனையே கண்டு இன்புறுகிறாரோ ! பிசிர் இல்லாமல் , உள்ளத்தின் ஆழத்திலிருந்து யாருடைய உள்ளத்திலும் புகுந்து கிளுகிளுக்கச் செய்யும் ஒலி அது; ஒலியா ? அன்று அன்று ; பாட்டு . பாட்டா ? அன்று அன்று ; இதய நாதம் . இதய நாதமா ? அன்று அன்று ; ஆன்மாவின் உல்லாசக் கொந்தளிப்பு . அதைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை . நேரே கண்டும் கேட்டும் அனுபவிப்பதற்குரியது அது
இத்தகைய பெருமானைத் தரிசிக்கவும் வணங்கவும் அவரோடு உரையாடவும் , அவரைப் பாடவும் முருகனருள் கூட்டுவித்தது. …..
” பாய்இருக்கும் ; அதன்மேல் அமர்ந்தி ருப்பான் ;
பால்இருக்கும் ; வருவார்கள் குடிக்க ஈவான் ;
நாய்இருக்கும்; சாய்பாபா என்னும் பேரால்
நடமாடித் திரிந்திருக்கும் ; நெஞ்சம் எல்லாம்
போயிருக்கும் அவிச்சையினைப் போக்கி என்றும்
பொருளாகும் மெய்ஞ்ஞானம் ஈயும் சுத்தன்
தாயிருக்கும் அன்புடையான் , அருணை தன்னில்
சார்ராம சுரத்குமார் என்னும் யோகி “
” தலையில் ஒரு பாகைஉண்டாம் ; தாடி உண்டாம்
சார்கின்றோர் தமக்கெல்லாம் சிரித்துப்பேசி
அலைவறவே மனம் இருக்கும் தன்மை சொல்வான்
ஆனந்தப் பெருநிலத்தில் உலாவுகின்றான்
கலைஉணர்வால் அறியாத காட்சி எல்லாம்
கண்டுகொண்டே சிங்கம்போல் நிற்கின்றானால்
உலைவில்லாப் புகழ்பெற்ற அருணையின்கண்
ஒளிர்கின்ற ராம்சுரத் குமாரயோகி
” கரந்தனில் அபயம் காட்டிக்
கருணைசெய் ஞானி,ராம
சுரத்குமார் என்னும் தேவன்
தூவருள் வாழி! வாழி !
என எண்ணற்றப் பாடல்களை யோகியின் முன்பு பாடுவதுண்டு. அதை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து படியெடுத்து திரு கிவாஜ அவர்களிடம் படித்துக் காட்டி பின்னர் புத்தகங்களாக வெளிவந்தன!
