|
திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதியைப் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
கர்நாடக சங்கீதத்தில் சரளி வரிசை ஜண்டை வரிசை கீதம் போன்ற வரிசைகளில் வர்ண பாடத்திற்கு முன்பாக இதை சொல்லிக் கொடுப்பார்கள். மிகவும் பரவலானது பிலஹரி ராகத்தில் அமைந்துள்ள ரார வேணு கோப பாலா என்ற ஸ்வரஜதி.
ஸ்வரமும் அக்ஷரங்களும் இணையாக அமையப் பெற்றவை இவை.
இந்தக்கதையில் 10 வயது பெண் குழந்தை கீதா பாடல் கற்றுக் கொள்வதைப் பற்றி சுவையாக எழுதியிருக்கிறார்.
கலை என்பது என்ன, அதை அனுபவிப்பதா, நாம் அதனால் மேன்மை அடைவதா, மேம்போக்காக பிறர் பாராட்டுவதா, நாம் நமக்கே உரிய வகையில் அந்தப்பாடலை ராகத்தை புரிந்து கொள்வதா என்ற கேள்விகளை எழுப்புகிறார்.
வெளிர் மஞ்சள் டெர்லின் ஷர்ட், வீட்டிலே சலவை செய்த வேஷ்டி, புகையிலை கறை படிந்த பற்கள், குடை இவற்றுடன் பஞ்சு சார் என்ற பாட்டு வாத்தியார் அறிமுகமாகிறார். அவருக்கு மீனலோசனி என்ற முன்னாள் பாட்டு டீச்சர் கல்யாணம் ஆகிப் போனது சந்தோஷமாக இருக்கிறது இந்த சின்ன குழந்தையைப் போலவே.
காரணம் வறுமை. வெளிப்படையாகச் சொல்லாமல் ஆசிரியர் இதை கோடு காட்டுகிறார். ஆசிரியருக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையே நல்லதொரு நட்பு இணக்கம் மலர்கிறது. இவளால் என்ன முடியுமோ அதை அவர் ஊக்குவிக்கிறார்.
இரண்டாம் காலம் மோகன வர்ணம் பாட வரவில்லை என்றால் தவறு இல்லை என்கிறார் போகப் போக சரியாகி விடும் என்று நம்பிக்கை தருகிறார் பல வர்ணங்கள் கீதங்கள் பாடம் சொல்லிக் கொடுத்த போதிலும் இந்தப் பெண்ணிற்கு பாடுவது அவ்வளவு சிறப்பாக வரவில்லை. ஆனால் வீட்டாருக்கு நல்லதாக நாலு பாட்டு இவள் பாடவேண்டும் என்ற கவலை.
டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் அனைத்து இசைவிழாக்களுக்கும் கீதாவின் அம்மா இவளை அழைத்துச் செல்ல அங்கு சியாமா சாஸ்திரிகளின் அம்பா காமாக்ஷி என்ற பைரவி ராக ஸ்வரஜதி இந்த குழந்தையை மிகவும் அசைத்து விடுகிறது. அதன் பாவம் கண்களில் நீர் வர வைக்கிறது. பஞ்சு சார் அதையும் சொல்லித் தர முற்படுகிறார்.
ஒரு சமயம் அகப்படுகிறது ஒருசமயம் நழுவி விடுகிறது ஒரு குழந்தையை நாம் கூப்பிட்டு கொண்டாடும்போது வருவதுபோல் போக்குக் காட்டி ஓடிவிடும் பிறகு தானாகவே வந்து கொஞ்சும் நாம் அணைக்கையில் நழுவி ஓடும் என்று அற்புதமாக இந்த இடத்தை திருமதி சீதா ரவி வர்ணித்திருக்கிறார். இரண்டு வருடங்கள், இரு நோட்டு புத்தகங்கள் ஆனால் பாட வரவில்லை. பஞ்சு சாரை ஒரு காரணம் சொல்லி இந்த டியூஷன் வகுப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள்.
இந்தப் பெண் குழந்தை வளர்ந்து பெரியவளாகி அவளதுகுழந்தைகள் அடதாள வர்ணத்தையும் பைரவி ஸ்வரஜதி யையும் சிறப்பாக பாடினாலும் கதாநாயகிக்கு பஞ்சு சாரும் பிருந்தாவனமும் அதன் உள்ளீடான புல்லாங்குழலும் மனதில் இசைத்துக் கொண்டே இருக்கின்றன.
ஸ்வரஜதி என்பது சுரமும் சாகித்தியமும் முற்றிலும் இயைந்து போவதுதான். குருவும் சிஷ்யையும் அவ்வாறு இருப்பதை இந்தக் கதை ஆர்ப்பாட்டமே இல்லாமல் சிறப்பாக சொல்லிச் செல்கிறது. நாம் பஞ்சரத்ன கீர்த்தனைகளை தியாகையர் ஆராதனை போது கேட்டிருப்போம்.
அந்தக் கீர்த்தனைகளில் சரணங்களை ஸ்வரஜதி பாணியில் நாம் கேட்டு அனுபவிக்க முடியும். கதாசிரியருக்கு வணக்கம்.
ReplyForward | |