
வரலாறு எப்போதும் வெற்றி பெற்றவர்களின் கதை. அந்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அதில் இடமில்லை. அப்போது யார் அதிகாரத்தில் இருந்தார்களோ அவர்களின் வெற்றியாகவே எழுதப்படும். வரலாறு என்பது அதனால் தான் அரசர்களின் வரலாறாக தலைவர்களின் வரலாறாக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
இதெல்லாம் நமக்குப் புதிதல்ல.
ஆனாலும் இதில் இன்னொரு வேடிக்கை
வரலாறு தனக்கு யார் வேண்டுமோ
அவர்களை மட்டுமே பத்திரப்படுத்திக் கொள்கிறது.
அது வேறுவேறு மனிதர்களாக இருந்தால் கூட
பரவாயில்லை.
ஒரே மனிதரிடம் கூட அவரின் ஒரு பக்கத்தைக் கொன்று
தின்று பசியாறி இன்னொரு பக்கத்தை மட்டும் ஊதிப் பெருக்கி விசுவரூபமாக்கி அதுவே அவராக காட்டுவதில்
கில்லாடியாக இருக்கிறது.
மகாத்மா ஜோதிபா புலே எழுதிய மராட்டிய சிவாஜியைக் காணவில்லை.
திலகர் எழுதிய சிவாஜிதான் மாபெரும் சக்ரவர்த்தி சிவாஜியாக வரலாற்றில் நிலை பெற்றிருக்கிறார்.
காரணம் புலே காட்டியது “சூத்திர சிவாஜி .”. அரசனான வரலாறு. திலகர் எழுதியதோ “இந்து சாம்ராஜ்ய” சக்ரவர்த்தி சிவாஜி.
இப்படியாகத்தான் வரலாறு தனக்கு சாதகமானதையும்
தன் அரசியலுக்கும் அதிகாரத்திற்கு துணைபோவதையும் மட்டுமே பத்திரப்படுத்திக் கொள்கிறது.
