புத்தர் எனும் புனிதப் பேரொளி

*செல்வந்தர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், வறுமையால் வாடியவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்து துறவியர் தோன்றியிருக்கிறார்கள்.
துறவு பூணும் மனநிலையில் உள்ளவர்களுக்குச் செல்வம் இருப்பதும் ஒன்றுதான். இல்லாததும் ஒன்றுதான்.
புத்தர் மாபெரும் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜ வம்சத்தின் வாரிசு. விரும்பியிருந்தால் அவர் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் தனது பெரும் செல்வத்தை லட்சியம் செய்யாது துறந்தது அவரது துறவு மனம்.
துறவியர்களில் ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றோர் மணமாகாமலே துறவியானவர்கள். ராமகிருஷ்ணர், வள்ளலார், அரவிந்தர் போன்றோர் மணமாகி அதன்பின் துறவியானவர்கள். ராகவேந்திரர், புத்தர் போன்றோர் மணமானதோடு குழந்தை பெற்று அதன்பின் துறவியானவர்கள்.
புத்தர் பேரழகர். அவரது மனைவி யசோதரா பேரழகி. அழகான ராகுலன் என்ற பிள்ளை புத்தருக்கு உண்டு. பெரும் செல்வத்தையும் அழகிய மனைவியையும் அன்பு மகனையும் துறந்து துறவியானார் புத்தர்.
*புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன். பின்னாளில் ஞானம் பெற்றவர் என்ற பொருளில் புத்தர் என அழைக்கப் படலானார்.
சித்தார்த்தர் பிறந்த ஏழாம் நாளே அவர் தாய் மாயாதேவி இறந்தார். இவரது தாயின் தங்கையான சிற்றன்னை கெளதமிதான் இவரை வளர்த்தார். சித்தார்த்தரின் தந்தை பெயர் சுத்தோதனர்.
*சித்தார்த்தனின் ஜாதகத்தைப் பார்த்து அவர் துறவியாகக் கூடும் என்பதை ஏற்கெனவே உணர்ந்திருந்தார் தந்தை.
எனவே உலகின் துயரங்கள் எதுவும் சித்தார்த்தன் கண்ணில் படாமல் அவரைப் பொத்திப் பொத்தி அரண்மனைக்கு உள்ளேயே வைத்து வளர்த்தார்.
தன் இருபத்தொன்பதாம் வயதில் தேரிலேறி நகரில் வீதியுலா சென்ற சித்தார்த்தர் தற்செயலாக மூன்று விஷயங்களைக் கண்டார்.
ஒரு நோயாளி, ஒரு வயோதிகன், ஒரு சடலம் ஆகியவற்றைக் கண்ட அவர் பிணி, மூப்பு, சாக்காடு இவை மூன்றும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாதவை என்பதை அறிந்தார். வாழ்வின் நிலையாமையைப் பற்றி அவர் உள்ளம் தீவிரமாய்ச் சிந்தித்தது.
துறவுக்கான மன எழுச்சி பெற்ற அவர், அன்றிரவே மனைவியையும் மகனையும் துறந்து கானகம் சென்றார். போதி மரத்தடியில் அமர்ந்து தவத்தில் ஈடுபடலானார். போதி மரம் என்பது அரச மரம்தான். அரச வாழ்வைத் துறந்து அரச மரத்தடியில் அமர்ந்து நிகழ்த்தப்பட்ட கடும் தவம் சித்தார்த்தருடையது.
*அவர் பற்பல நாட்கள் எதையும் உண்ணவில்லை. உயிர் தொடர்ந்து உடலில் தரிக்க இயலாத அளவு உடல் வாடத் தொடங்கியது. அப்போது யாரோ ஒரு வழிப்போக்கன் பாடிய பாடல் அவர் காதில் விழுந்தது. பாடலின் பொருள் இதுதான்:
யாழின் நரம்பை வலிந்து கட்டாதே. நரம்பு அறுந்துவிடும். யாழின் நரம்பை மெலிந்து கட்டாதே. அப்போதும் இசையை இசைக்க இயலாது. அளவாகக் கட்டு. அப்படிச் செய்தால்தான் யாழிலிருந்து உன்னால் உன்னத இசையை எழுப்ப முடியும்.
இவ்வரிகள் புத்தரைச் சிந்தனையில் ஆழ்த்தின. உணவே உண்ணாமல் இருந்தாலும் உடல் என்ற யாழ் பழுதுபடும். அதிகம் உணவு உட்கொண்டாலும் உடல் யாழ் கெட்டுவிடும். எனவே எதிலும் மிதமாக இருந்தே உயர்நிலையான ஆன்மிகத்தை அடைய முடியும் என்று புத்தருக்குத் தெளிவு பிறந்தது.
அதன்பின்னர் தவத்தினிடையே அவர் சிறிதளவு உணவுண்ணத் தொடங்கினார்.
*புத்தர் தவத்தின் மூலம் கண்டுணர்ந்த உண்மைகளில் முக்கியமானது ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பது.
ஆனால் அந்தப் பேருண்மையைக் கண்டுணர்வதற்கும் முன்னால் பற்பல முக்கியமான வேறு சில சிறிய சிறிய உண்மைகளையும் கூட அவரின் தெளிந்த மனம் கண்டுணர்ந்தது. அவையும் கூட நாம் அறிந்து பின்பற்றுவதற்கு உரியவை.
உடலும் மனமும் ஒன்றுக்கொன்று முரணானவை. உடலை வலிமைப் படுத்த வேண்டுமானால் அசைத்து வலிமைப்படுத்த வேண்டும். மனத்தை வலிமைப் படுத்த வேண்டுமானால் அதை அசையாமல் இருக்கச் செய்யவேண்டும்.
உலகத்தில் நடமாடும் எதிரிகளை மடக்குவதில் அதிக வீரமில்லை. உன் உள்ளத்தில் நடமாடும் காமம், குரோதம் போன்ற எதிரிகளை மடக்குவதே உண்மையான வீரம்.
*இவைபோன்ற புத்தரது போதனைகள் அடங்கிய வாய்மொழி நூல்தான் தம்மபதம். அதுவே பின்னாளில் எழுத்து வடிவம் பெற்று திரிபிடகம் என்ற நூலாயிற்று.
சித்தார்த்தர் புத்தராக மலர்ந்த பின்னாளில், பல ஆண்டுகள் சென்றபின், புத்தர் சங்கத்தில் அவரது மனைவியும் மகனும் இணைந்துகொண்டு அவர்களும் துறவியானார்கள். புத்தர் எண்பதாம் வயதில் பரிநிர்வாணம் அடைந்து உலகை விட்டு மறைந்தார்.
*சித்தார்த்தரின் இளமைப் பருவத்திலேயே அவர் மாபெரும் ஞானியாக மலர்வார் என்பதை அறிவிக்கும் இயற்கையின் சூசகமான சம்பவங்கள் சில நடந்தன.
சிறுவன் சித்தார்த்தனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது கோயிலில் இருந்த தெய்வச் சிலை சிறுவனைக் குனிந்து வணங்கியது.
*சித்தார்த்தர் ஒருமுறை நாவல் மரத்தடியில் மணிக்கணக்கில் தியானம் செய்துகொண்டிருந்தார். அப்போது மரத்தின் நிழல் வெய்யிலை ஒட்டி நகராமல், சித்தார்த்தரைச் சுற்றித் தொடர்ந்து பரவி அவரைச் சூரிய ஒளியின் கடுமை தாக்காது பாதுகாத்துக் கொண்டிருந்தது.
*வள்ளுவர்போல், வள்ளலார்போல், புத்தரும் புலால் உணவைக் கண்டித்தவர். உயிர்ப் பலியை எதிர்த்தவர்.
பிம்பிசாரன் அரசவையில் நடைபெற்ற வேள்வியில் பலியிடுவதற்காக ஓர் ஆட்டிடையன் மூலம் ஏராளமான ஆடுகள் அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்தார் புத்தர்.
அந்த ஆடுகளில் கால் ஊனமான ஓர் ஆட்டுக்குட்டியும் நொண்டி நொண்டி நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவர் உள்ளம் உருகியது.
தன் ரோஜாப் பூப்போன்ற கரங்களில் ஒரு மல்லிகை மாலையைத் தாங்குவது மாதிரி கால் ஊனமான ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு பிம்பிசாரன் அவை நோக்கித் தானும் நடந்தார் புத்த பெருமான்.
பிம்பிசாரனிடம் ஆடுகளைப் பலியிடுவதை நிறுத்தவேண்டும் என வேண்டினார். வேள்வியில் பலியிடப்படும் ஆடுகளை இறைவன் எப்படி உணவாக ஏற்பார் என வாதிட்டார்.
கடவுளின் பிள்ளைகள் தானே எல்லா உயிர்களும்? மனிதன் வாயுள்ள பிள்ளை. ஆடு வாயில்லாத பிள்ளை. அவ்வளவு தானே வேறுபாடு? வாயுள்ள பிள்ளை வாயில்லாத பிள்ளையை வெட்டிக் கறி சமைத்துப் படைத்தால் தந்தையான இறைவன் அந்த உணவை ஏற்பாரா எனக் கேள்வி எழுப்பினார்.
பிம்பிசாரன் மனம் மாறினான். தன் நாட்டில் புலால் உணவைத் தடைசெய்ய ஆணை பிறப்பித்தான். புத்தர் வரலாற்றைத் தமிழில் கவிதையாக எழுதிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இச்சம்பவத்தை அழகாகச் சித்திரிக்கிறார்:
`ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்
ஆக்கிய யாகத்து அவியுணவை
ஈட்டும் கருணை இறையவர் கைகளில்
ஏந்திப் புசிப்பரோ கூறுமையா?
மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்
வாளால் அரிந்து கறிசமைத்தால்
தந்தையும் உண்டு களிப்பதுண்டோ? இதைச்
சற்றுநீர் யோசித்துப் பாருமையா!`
*கிரிசா கெளதமி என்ற பெண்மணியின் குழந்தை இறந்துவிட்டது. கடும் துயரடைந்த அவள் புத்தரைத் தேடி ஓடி வந்தாள். மாபெரும் ஞானியான அவர் தன் குழந்தைக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமென அவர் திருப்பாதங்களில் குழந்தையைக் கிடத்தி வேண்டினாள்.
அதற்கென்ன, மீண்டும் உயிர் கொடுக்கலாம், ஆனால் சாவே நடக்காத வீட்டிலிருந்து ஒரு பிடி எள் வாங்கி வா! என புத்தர் அவளை அனுப்பி வைத்தார். பல வீடுகளில் தேடித் தேடிக் கேட்டதும் அவளுக்கு உண்மை புரிந்தது.
எல்லோர் வீட்டிலும் தாத்தா பாட்டி தாய் தந்தை பிள்ளை பெண் என யார் யாரோ இறந்திருந்தார்கள். இறப்பே நடக்காத வீடு என உலகில் எந்த வீடும் இல்லை.
இறப்பு தவிர்க்க இயலாதது என்ற உண்மையை அவள் உள்மனம் உணர்ந்து அமைதியடைந்தது. புத்தரின் திருவடிகளில் சரண்புகுந்த அவள், புத்தர் சங்கத்தில் பெண் துறவியாக இணைந்தாள் என்பது புத்தர் வரலாற்றில் வரும் ஒரு சம்பவம்.
புத்தரின் தவப் பெருமையை உணர்த்துவதோடு அவரது அறிவுக் கூர்மையையும் சேர்த்தே உணர்த்துகிறது இச்சம்பவம்.
*புத்தரின் வரலாற்றையும் கொள்கைகளையும் விளக்கி ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு என்ற தலைப்பில் எட்வின் அர்னால்ட் ஆங்கிலத்தில் கவிதை நூல் படைத்துள்ளார்.
புகழ்பெற்ற அந்நூலை ஆசிய ஜோதி என்ற தலைப்பில் கவிதையாகவே தமிழாக்கம் செய்துள்ளார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இது தமிழில் வெளிவந்துள்ள புத்தர் தொடர்பான கவிதை நூல்களில் மிக முக்கியமானது.
*அதுபோலவே புத்தரைப் பற்றித் தமிழில் வெளிவந்துள்ள உரைநடை நூல்களில் முக்கியமானது எழுத்தாளர் அமரர் சிவபாத சுந்தரம் எழுதிய கெளதமபுத்தர் அடிச்சுவட்டில் என்ற நூல்.
தமிழில் சுவடு பதித்தவர் என்று சிவபாத சுந்தரத்தைச் சொல்லவேண்டும். மாணிக்கவாசகர் வரலாறு தொடர்புடைய இடங்களில் பயணம் செய்து அவர் எழுதிய மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில், சேக்கிழார் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட இடங்களில் பயணம் செய்து எழுதிய சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை.
அந்த வரிசையில் அமைந்தது கெளதம புத்தர் அடிச்சுவட்டில் என்ற அவரது நூல்.
அவர் வட இந்தியா சென்று புத்தர் வரலாற்றோடு தொடர்புடைய இடங்களிலெல்லாம் பயணம் செய்தார். புத்தர் தொடர்பான கோயில்கள், கல்வெட்டுகள் போன்றவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவற்றின் அடிப்படையில் அவர் எழுதிய நூலே கெளதம புத்தர் அடிச்சுவட்டில் என்ற உரைநடை நூல்.
ஆசியாவில் தோன்றிய புத்தரை ஆசியாவின் ஜோதி எனப் புகழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர் உலகின் ஜோதி. உலக மக்கள் அனைவரும் அறிந்து பின்பற்ற வேண்டிய செய்திகள் புத்தர் வாழ்வில் ஏராளம் உண்டு.
(நன்றி: மாலைமலர்)

