
“அப்பா, அப்பா. எனக்கு காலேஜ் கல்சுரலில் கிடைத்த பரிசுக்கோப்பையைப் பாரேன்” என்று துள்ளலுடன் வந்த மகள் பாருவைப்பார்த்த அவள் போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே சென்று விட்டார். செல்லப்பேத்தியின் முகவாட்டத்தைக்காணச்சகியாத பாருவின் பாட்டி அந்தக் கோப்பையைக் கையில் வாங்கி “எந்தப் போட்டியில் வென்றதற்குக்கிடைத்த பரிசு இது? ” என்று கேட்டாள். ” எனக்கு மிமிக்ரி நன்கு வரும் என்று தெரியும் இல்லையா பாட்டி. அதற்குக்கிடைத்த பரிசு தான் இது. அப்பாவுக்குத்தான் என் அருமை தெரியவில்லை. அவரையே என் திறமையைப் பாராட்ட வைக்கிறேன் பார்” என்று சவால் விட்டாள் பாரு.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் பாரு காலேஜிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போது அப்பாவின் துப்பாக்கி பீரோவின் மீது இருப்பதைப் பார்த்தாள். டியூட்டியின் நடுவில் வீட்டுக்கு வர நேர்ந்தால் அப்பா இப்படிச் செய்வது வழக்கம் தான். அவளுக்கு சட்டென்று ஒரு திட்டம் மனதில் உதித்தது. “பாட்டி, இன்று எனக்கு செமஸ்டர் ரிசல்ட் வந்து விட்டது. இரண்டு பாடத்தில் நான் பெயில். ” உருப்படாத கழுதை. நீ இருந்தென்ன போயென்ன” என்று அப்பா என்னைத்திட்டத்தான் போகிறார். ஆகவே பாட்டி போகிறேன். இதோ அப்பாவின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு என்னைச்சுட்டுக்கொள்ளப்
போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியுடன் தன் அறைக்குள் நுழைந்து கதவைத்தாளிட்டுக் கொண்டாள். பயந்து போன பாட்டி தன் மகனைக் கூப்பிட்டுக்கொண்டே பேத்தியின் அறைக்கதவைத் தட்டலானாள். துப்பாக்கியில் தோட்டா இருக்காதே, ஒருவேளை தவறுதலாக ஒரு தோட்டா இருந்து விட்டால்?? நினைக்கவே நெஞ்சம் பதறியது அப்பாவுக்கு. அவரும்”கதவைத்திற” என்று கெஞ்சிக் கொண்டே கதவைத்தட்டலானார். “முடியாது முடியாது. இதோ, நான் சுட்டுக்கொள்ளப்போகிறேன்” என்று கத்திக் கொண்டே பாருவும் தன் மிமிக்ரி திறமையைக் காட்டும் விதமாக தன் கையையும் வாயையும் உபயோகித்துக்கத்தினாள் “டுமீல்”.
