ஜெயதேவன் கவிதை

என் நிழலுக்கும் எனக்கும்
நீண்ட யுத்தம் அடிக்கடி நிகழும்
நிசப்தமாய்

தண்ணீரைத் “தண்ணீர்” என்பேன்
நான்
“திரவமான தீ அது “என்றிடும்
என் நிழல்

இருட்டை” இருட்டு “என்பேன்
“இல்லை சூரியனின் மரணம்”
என்றுரைக்கும் அது

“மேகம் “என்பேன் விண்ணைக்
காட்டி
“இல்லை.தூசு படலம் அது “என்று உரைக்கும் என் நிழல்

“விண்மீன் என்பதும் கோள்தான்
பெயரிடப்படாத கோள் “என்பேன்
“தேவர்களின் யாகத் தீ வணங்கு”
என்றிடும் அது

“நோய் உடல் இயற்கை” என்பேன்
நான்
“உடலுக்குள் விஷச்செடி இருக்கும்
தோண்டிப் பார்” என்றிடும் நிழல்

“சாவு ஒரு சம்பவன்” என்பேன்
“பாவத்தின் சம்பளம்” என மறுதலிக்கும் அது

உறவை உரை கல்லில் தேய்க்கும்
மனைவியை சல்லடையால் சலிக்கும்
பிள்ளைகள் கண்ணீரை தராசில்
நிறுத்தும்
ஒவ்வொரு நாளும் நிகழும் எங்கள் அசுர யுத்தம்

மூளையில் எலி இருந்து கடிப்பது போல
மனசில் எப்போதும் ஓடும் இந்த
கரப்பான்பூச்சி

அது தொடாதவனை விட்டுவிடுகிறது
தொட்டவனைப் பற்றிக்கொள்கிறது வச்சிரம்போல

இப்போது நான் என்பது
என் நிழலும் சேர்ந்ததே

நீங்களும் உங்கள்

நிழலோடு பேசிப்

பாருங்கள்

ஜெயதேவன்