காணாமல் போன கவிதை

(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது )

நாகேந்திர பாரதி

கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .
‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்
பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு இடைவெளி ‘ என்று .

உடனே கடைசி வரியை ‘ பொம்மைகளும் ‘ என்று மாற்றி
‘போன வருடம் போலவே போதிய இடைவெளியில்
பொம்மைகளும்’ என்று எழுதினேன் .

‘ மனிதர்களைப் போலே ‘ என்று விளக்கமாக எழுதலாமே என்றார் . சரி என்று சேர்த்து ‘போன வருடம் போலவே போதிய இடைவெளியில்
பொம்மைகளும் மனிதர்களைப் போலே’ என்று எழுதினேன் .

‘இடைவெளி மட்டும் போதுமா , கை கழுவுதல் , முகக் கவசம் அணிதல் போன்றவற்றை விட்டு விட்டீர்களே ‘ என்று கேட்டார் .
அதையும் சேர்த்து ‘போன வருடம் போலவே போதிய இடைவெளியில்
பொம்மைகளும் மனிதர்களைப் போலே முகக் கவசம் அணிந்து
கை கழுவிக் கொண்டு ‘என்று எழுதியதும் ‘ அருமை ‘ என்று வாங்கிக் கொண்டு போய் அவர்கள் வீட்டுக் கொலு அருகில் ஒட்டி இருப்பதாகச் சொல்லிக் கூட்டிப் போனார் .

வாசல் அருகே ஒட்டியிருந்த அந்தக் காகிதத்தில் எனது கவிதையின் இரண்டு வரிகள் எடுக்கப்பட்டு ‘போன வருடம் போலவே போதிய இடைவெளியோடு முகக் கவசம் அணிந்து கை கழுவிக் கொண்டு ‘
என்று எனது கவிதை , பாதுகாப்பு வாசகமாக மாறி இருந்தது .

நான் வாசலில் வைத்திருந்த திரவத்தை கைகளில் தெளித்துக் கொண்டு முகக் கவசத்தைக் கழற்றாமல் போதிய இடைவெளியோடு அமர்ந்து அவர் வீட்டுக் கொலு பொம்மைகளைப் பார்த்தேன் . நெருக்கமாய் வைக்கப் பட்டிருந்த அந்த பொம்மைகள் ‘ போதிய இடைவெளியோடு பொம்மைகள் ‘ என்று பூடகமாய்ச் சொல்லப்பட்ட என் கவிதை வரிகளைச் சொல்லிச் சிரித்தன .