இனிக்கும் தமிழ் – 127 / டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம் – சிறு விறகால் தீமூட்டி

ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ..வாழ்க்கை வாழ்வதற்கே..அதுவும் இன்பமாய்
வாழ்வதற்கெ..அல்லவா..?

அப்படி என்ன பிடிப்பு வாழ்க்கையில்?

நெருங்கிய உறவுகள் – அப்பா, அம்மா, கணவன், ,மனைவி, பிள்ளைகள். ஐயோ,
இவர்களை விட்டு விட்டு எங்கே போவது. அவர்கள் தான் என் உயிர்.

ஆனால்..நாவுக்கரசர் சொல்கிறார்….. நாளை நீ இறந்த பின், நீ உயிருக்கு
உயிராய் நினைத்த அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு
என்று எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கிறாய்?

சேர்த்த செல்வம் இருக்கிறதே?

நாவுக்கரசர் சொல்கிறார், “நீ எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள். நீ
தளர்ந்த போது ஒரு செல்வமும் உன்னை தாங்கிப் பிடிக்காது. ஒரு செல்வமும்
உன் கூனை நேராக்காது. ஒரு செல்வமும் உன் தலை முடி உதிர்வதை தடுத்து
நிறுத்தாது.  பணம் இருந்து என்ன செய்ய. ஒரு மருந்தும் நம்மைக் காக்காது.
இப்படி உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு உதவி செய்யாத பணத்தின் மேலா
இவ்வளவு பிடிப்பு ? என்று கேட்கிறார். .

பாடல்

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்  எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

பொருள்

எத்தாயர் = எத்தனை தாயார்

எத்தந்தை = எத்தனை தந்தைமார்

எச்சுற்றத்தார் = எவ்வளவு சுற்றத்தார்கள்

எம்மாடு =  எவ்வளவு செல்வம்.

சும்மாடாம் =  எந்தச் செல்வம் உன்னைத் தாங்கும்.

ஏவர் நல்லார் = இதில் யார் நல்லவர்கள்?

செத்தால் = இறந்து போனால்

வந்துதவுவார் ஒருவ ரில்லை  = உதவிக்கு ஒருவரும் வர மாட்டார்கள்

சிறுவிறகால் தீமூட்டிச் = சிறு விறகால் தீமூட்டி

செல்லா நிற்பர் = சென்று கொண்டே இருப்பார்கள்.

சித்தாய =  சித்தம், அறிவு

சித்தாய வேடத்தாய் = ஞானமே உருவாக நின்றவனே

நீடு பொன்னித் = சிறந்த பொன்னி நதிக்கரையில் உள்ள

திருவானைக் காவுடைய செல்வா = திருவானைக்காவல் என்ற திருத் தலத்தில்
எழுந்து அருளி இருப்பவனே

என்றன் அத்தாவுன்  = எந்தன் தலைவனே,உன்

பொற்பாதம் அடையப் பெற்றால் = பொன் போன்ற திருவடிகளை அடையப் பெற்றால்

அல்லல் = துன்பம்

கண்டங் = கண்டு அங்கு

கொண்டடியேன் = கொண்டு அடியேன்

என்செய் கேனே. = என்ன செய்வேன்

அதாவது, உன் திருவடிகளை சரண் அடைந்தால்  துன்பமான வாழ்வை நான் அடைவேனா?
அடைய மாட்டேன் என்பது பொருள்